பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லிக்கு புறப்பட்டிருக்கிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் காலை 5:50 மணி விமானத்தில் டெல்லி புறப்பட்டிருக்கிறார். அவருடன் கட்சியின் துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமியும், தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணியும் உடன் சென்றிருக்கின்றனர். இன்று மதியம் 12 மணி அளவில் குடியரசு துணை தலைவராக தமிழகத்திலிருந்து தேர்வாகி இருக்கக்கூடிய சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் கலந்து பேச இருக்கிறார்கள். அதன் பின்னராக சற்று ஓய்வுக்கு பிறகு நான்கு மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை சந்திப்பார் என்ற ஒரு தகவல் இருக்கிறது.
ஆனால் அதிமுக தரப்பிலிருந்து பாஜக தரப்பிலிருந்தும் அமித் ஷா எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து சொல்லப்படவில்லை. அப்படி சந்திக்கும் பொழுது கூட்டணி சார்ந்த விவகாரங்கள், கூட்டணியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் செங்கோட்டையன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்.. நாளை டெல்லி செல்கிறார் இபிஎஸ்.. அமித்ஷாவுடன் முக்கிய மீட்டிங்..!!
அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி டெல்லியில் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, கட்சியிலிருந்து விலகிய தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து, ஒற்றுமைக்கான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கூறினார்.
இதற்கு உடன்பாடாத எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கினார். அதுமட்டுமின்றி அவர்களது ஆதரவாளர்களையும் பதவியில் இருந்து தூக்கியடித்தார். இந்தச் சூழலில், பாஜகவின் தலையீட்டுடன் அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நேற்று சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, பேசிய விவகாரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுகவை சிலர் அழிக்க பார்ப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மறைமுகமாக சாடினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியை சிலர் கவிழ்க்க முயன்றதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம் மீது விமர்சனங்களை வீசினார். அதிமுகவின் 18 எம்.எல்.ஏ.க்களை கடத்தி சென்றதாக டிடிவி தினகரன் பெயரைக் குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை இறைவன் மன்னிக்க மாட்டார் எனவும் கூறினார்.
இந்நிலையில் தான் இந்த சந்திப்பு, தமிழக அரசியலில் பாஜக - அதிமுக கூட்டணியை மீண்டும் உருவாக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. டெல்லி பயணம், அதிமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதனால், தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உச்சத்தில் உள்ளது.
இதையும் படிங்க: ஓவர் ஸ்பீடில் வந்த BMW கார்.. தூக்கி வீசப்பட்ட பைக்.. நிதியமைச்சக துணை செயலர் உயிரிழப்பு..!!