கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகமும், அதன் தலைவர் விஜய்யும் மொத்தமாக முடங்கிப்போய்விட்டதாக செய்திகள் வெளியாகின. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் மனமுடைந்த விஜய் அரசியலை விட்டே விலக முடிவெடுத்துள்ளதாக கூட தகவல்கள் வெளியாகின. அப்போது விஜய் கட்சி இதுவரை தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறவில்லை என்ற செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக என எந்த கட்சியுமே நினைக்காத நேரத்தில் முழு வீச்சில் தேர்தல் ஆணைய பணிகளில் சத்தமே இல்லாமல் களமிறங்கியுள்ளது தவெக.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் அழைத்து சந்தித்த விஜய் மீண்டும் ஃபுல் பாமிற்கு வந்துவிட்டதாக தவெகவினர் கூறுகின்றனர். நேற்று முதற்கட்டமாக கட்சியுடைய அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு கட்சியுடைய தலைவர் விஜய் தலைமையில் 28 பேர் கொண்ட நிர்வாகக்குழு ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த குழு விஜய் தலைமையில செயல்படும் என்றும், தமிழக வெற்றி கழகத்தின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க இந்த குழுவில் முதல் நபராக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். முக்கிய நிர்வாகிகளான இவர்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்களின் செயலாளர்களும், உறுப்பினர்களாக உள்ள இருவரும் நிர்வாகக்குழு பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
உடனடியாக இந்த குழுவினுடைய முதல் ஆலோசனை கூட்டமும் இன்று நடந்து முடிந்திருக்கிறது. அந்த கூட்டத்தில் கட்சியின் சின்னம் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாகவும் கட்சியின் சின்னம் தொடர்பாக இன்று இறுதி முடிவெடுத்து கட்சியினுடைய தலைவருக்கு பரிந்துரை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பரிந்துறையின் அடிப்படையில் கட்சியினுடைய தலைவர் இறுதி முடிவெடுப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்த குழு கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மையக் குழு போல செயல்படும் எனக்கூறப்படுகிறது. அதாவது கட்சியின் செயல்பாடு, நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை பரிசீலனை செய்து தலைவர், செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு பரிந்துரை செய்வார்கள். அதன் பிறகு தலைவர் அந்த பரிந்துரைகள் மீது முடிவெடுப்பார் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர்..! அதிமுகவின் கூட்டணி அழைப்பை நிராகரித்தது தவெக… தலையில் இறங்கிய இடி…!
இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர் திருத்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம் தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மகளிர் மற்றும் இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் மனதில் நிற்கக்கூடிய நிறங்களை கவனத்தில் கொண்டு விஜய் 5 சின்னங்களை டிக் அடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கப்பல், ஆட்டோ உள்ளிட்ட பல சின்னங்கள் இருக்கக்கூடிய நிலையில் அதில் 5 சின்னங்களை தேர்வு செய்திருக்கும் விஜய் வரும் நவம்பர் 12ம் தேதி சின்னம் கேட்டு விண்ணப்பிக்கவுள்ளதாக கூறப்பட்டது. எனவே விஜய் டிக் அடித்து வைத்து 5 சின்னங்களில் எதை இறுதி செய்வது என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிர்வாகக்குழு இன்று முடிவெடுக்கும் சின்னமானது விஜயிடம் பரிந்துரைக்கப்படும். அதற்கு விஜய் ஓ.கே.சொல்லும் பட்சத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்கான சின்னத்தை பெறும் பணிகளில் தவெக முழுவீச்சில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பணம் இருந்தால் தான் அரசு பதவியா? நகராட்சி நிர்வாகத்துறை ஊழலுக்கு தவெக கண்டனம்...!