சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) குதிரைபேரம் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரி அதிரடி நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வி.சி.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ், அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டு பேரம் பேசினார். ஆனால், கட்சி விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்ததால் இபிஎஸ் அவருக்கு பொறுப்பு வழங்க மறுத்துவிட்டார்.
அதன் பிறகு ஆதவ் த.வெ.க.வில் இணைந்தார். தற்போது ஆதவும், செங்கோட்டையனும் இணைந்து அதிமுக திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது என பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: கப்சிப்னு இருக்கணும்! வாய திறக்கக்கூடாது! கட்சியில் மீண்டும் இணைந்தவர்களிடம் இபிஎஸ் கறார்!!
அதிமுகவில் சமீபத்தில் ஏற்பட்ட உள் பிரச்சினையை அடுத்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் த.வெ.க. பக்கம் சாய்ந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

வேலுமணி அணியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்து ராஜினாமா செய்ததும், அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்த நிலையில், எம்எல்ஏக்களை இழுக்க த.வெ.க. தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறுகையில், “எம்எல்ஏக்களிடம் நடைபெறும் குதிரைபேரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். உண்மை வெளியாக வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதிமுக தரப்பில் இந்த விவகாரத்தை சட்டரீதியாக எடுத்துச் செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளன. த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த சில அதிமுக எம்எல்ஏக்களின் நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரிக்கை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் ஒற்றுமை முயற்சிகள் தொடரும் நிலையில், எதிர்க்கட்சியின் இந்த குற்றச்சாட்டு அரசியல் களத்தில் புதிய மோதலுக்கு வழிவகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். விரைவில் இரு தரப்பிலும் மேலும் விளக்கங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கட்சிக்கு துரோகம்.. மரகதமே ஒழிக.. ஒழிக..!! சொந்த தொகுதிக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்பு..!!