தமிழக அரசியலில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக-வின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மிக நெருக்கமான தளபதிகளாகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிமுக-வின் கொங்கு மண்டல முகமான எஸ்.பி. வேலுமணி மற்றும் வட தமிழகத்தின் வலிமையான தலைவரான சி.வி. சண்முகம் ஆகியோர் டெல்லி சென்று அமைச்சரைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கான வியூகங்கள் தயார்! பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை!!
"அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் இன்று டெல்லியில் என்னைச் சந்தித்தனர்" என்று மத்திய அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணிக்கு அச்சாரமா? அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்து டெல்லி தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதிமுக-வின் இந்த 'பவர்ஃபுல்' டீம் டெல்லி சென்று நிதியமைச்சரைச் சந்தித்திருப்பது, முறிந்திருந்த பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் துளிர்க்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருப்பினும், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிமுக தரப்பில் சொல்லப்பட்டாலும், 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 34 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7 மடங்கு உயர்வு - தங்கம் தென்னரசு பெருமிதம்!