சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியை (விசிக) பலப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியே ஒரு மாவட்டச் செயலரை நியமிக்க தலைவர் தொல். திருமாவளவன் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே மக்களவைத் தொகுதி வாரியாக மண்டல பொறுப்பாளர்களை நியமித்திருந்த நிலையில், இப்போது சட்டமன்றத் தொகுதி வாரியாக மாவட்டச் செயலர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், புதிய மாவட்டச் செயலர்கள் நியமனம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியைச் சேர்ந்த சில கட்சிகளின் நிர்வாகிகளும் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளில் இரண்டு அல்லது மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர்தான் உள்ளார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு! அறிவாலயத்தில் நடந்த மீட்டிங்! 2026 தேர்தல் அப்டேட்!
சில இடங்களில் வருவாய் மாவட்டம் வாரியாகவே மாவட்டச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் இணைந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து செயலாற்றுவது வழக்கம்.

விசிகவில் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலரை நியமித்தால், ஒரு தொகுதியில் இரண்டு அல்லது மூன்று விசிக மாவட்டச் செயலர்கள் இருப்பார்கள். அப்போது மற்ற கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் செலவுக்கான பணம் வழங்குவது, பிரசாரத்துக்கு தொண்டர்களை திரட்டுவது போன்ற பணிகளில் ஒருங்கிணைப்பு சிக்கல் ஏற்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
மேலும், பல மாவட்டச் செயலர்கள் இருந்தால் அவர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டு, தேர்தல் பணிகளில் எதிர்மறையான விளைவுகள் உண்டாகும் எனவும் கூறினர். எனவே, இந்த நியமனத்தை சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு செய்யுமாறு திருமாவளவனிடம் தெரிவிக்கும்படி கட்சி தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி ஒருங்கிணைப்பை பாதிக்கும் வகையில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸை விட நாங்க பெரிய கட்சி!! பார்த்து கவனியுங்க!! திமுகவுக்கு அழுத்தம் தரும் விசிக! திருமா ட்விஸ்ட்!