தென் மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நதிகள் இணைப்பு தொடர்பான புதிய திட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் இந்த விவகாரம் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்றார். மாநாடு முடிந்து டில்லி திரும்பிய அவர், பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், கூட்டம் சுமுகமாக நடைபெற்றதாகவும் கூறியதாக தகவல் தெரிவிக்கிறது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் முக்கிய பிரச்னைகளில் நதி நீர் பங்கீடும் ஒன்றாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக நதிகளை இணைக்கும் திட்டம் இருக்கலாம் என்ற கருத்தை அமித் ஷா முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமித் ஷா vs காங்கிரஸ்! 1937 தீர்மானம்!! வந்தே மாதரம் விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை!
இதற்கான வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தயாரித்திருந்ததாகவும், அந்த திட்டம் தொடர்பான விவரங்கள் தென் மாநில முதல்வர்களிடம் பகிரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டத்திற்கு முதல்வர்கள் சாதகமான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அமித் ஷா சென்னை வருவதற்கு முன்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் மூலம் முதல்வர் விஜய்க்கும் தகவல் சென்றதாக கூறப்படுகிறது. அமித் ஷாவின் செய்தியை அந்த எம்.பி., விஜயை சந்தித்து தெரிவித்ததாகவும், அதன் பின்னரே தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் விஜய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
மேலும், உலக வங்கியின் நிதியுதவியைப் பெற்று தென் மாநில நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை உருவாக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில முதல்வர்களிடமும் இந்த விவகாரம் தொடர்பாக அமித் ஷா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் மாநிலங்களின் நதி நீர் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த தீர்வு காணப்பட்டால், விவசாயம் மட்டுமின்றி குடிநீர் தேவைக்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில், மாநிலங்களின் நீர்வள உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, திட்டச் செலவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களும் இதில் இருப்பதால், திட்டம் நடைமுறைக்கு வருவது எளிதான விஷயமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடீர் அழைப்பு! டெல்லி விரைந்தார் நயினார் நாகேந்திரன்! அமித்ஷா வந்து திரும்பிய ஒரே நாளில் மாறிய அரசியல் களம்!