தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசகுமார் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. தேர்தல் நெருங்கிய நேரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 5,000 பள்ளிகளைக் குறிவைத்து, அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சென்னை காவல்துறையினர் அமலாக்கத் துறைக்கு அனுப்பியுள்ளனர். சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்காக, அமலாக்கத் துறையினர் சென்னை காவல்துறையிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கேட்டுப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: #BREAKING புழல் சிறையில் அன்பில் மகேஷ்... உள்ளே இறங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.. மொத்தமாக `முடக்க' திட்டம்...!
மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் தரப்பில்தான் பணத்தை வழங்கியதாகக் கூறியிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சண்முகப்பிரியா என்பவரின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சண்முகப்பிரியாவுக்கு இந்த வழக்கில் உள்ள தொடர்பு என்ன என்பதைக் கண்டறிவதற்காகவும், வசூலிக்கப்பட்ட பணம் அவரது வீட்டில் கைமாற்றப்பட்டதா என்பதை விசாரிப்பதற்காகவும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, கலைவாணர் அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது, அரசகுமார் மற்றும் முத்துக்குமாரைச் சந்தித்த அன்பில் மகேஷ், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் தன்னிடம் முறையிடலாம் என்றும், அவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்றும் கூறிய வீடியோவும் தற்போது சென்னை காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது. அந்த வீடியோவின் அடிப்படையிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அன்பில் மகேஷின் வங்கிக் கணக்குகளைத் தொடர்ந்து ஆய்வு செய்யும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அரசகுமாரின் வங்கிக் கணக்கில் சில தனியார் பள்ளிகள் பணம் செலுத்தியிருப்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள முத்துக்குமார் மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்குப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், எந்தெந்த வழிகளில் பணம் வசூலிக்கப்பட்டது, யார் யாரிடம் இருந்து பணம் பெறப்பட்டது, அந்தப் பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். விசாரணை முழுமையடைந்த பின்னரே இந்த மோசடியில் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “நான் பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் இருக்கா?” ... நீதிபதி முன்பு ஆதங்கத்தை கொட்டிய ‘அன்பில்’... காரசார விவாதம்...!