சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியதைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) தலைவர் அன்புமணி ராமதாஸ், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரடியாக விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கை பா.ம.க. வட்டாரத்திலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 29-ம் தேதி சென்னையில் பேட்டியளித்த அன்புமணி, “சீன ஆதிக்கத்தை குறைத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு கொண்டு வரும் ‘தி கிரேட் நிகோபர்’ திட்டத்தை, காடுகள் அழிக்கப்படும் எனக் கூறி ராகுல் எதிர்க்கிறார். ஆனால், கர்நாடக காங்கிரஸ் அரசு 12,500 ஏக்கர் காடுகளை அழித்து மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை அவர் வேடிக்கை பார்க்கிறார்” எனக் குற்றம் சாட்டினார்.
பா.ம.க.வின் வரலாற்றில் காங்கிரஸ் தேசிய தலைமையை இதுபோல் நேரடியாக விமர்சித்தது இல்லை. எனவே இந்த விமர்சனம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: “ராமதாஸுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு பா.ம.க. இரு பிரிவாக இருந்த நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணியில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது. தேர்தலுக்குப் பின் அன்புமணி – ராமதாஸ் இடையே சமரசம் ஏற்பட்டு, கட்சி முழுவதும் அன்புமணி கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தச் சூழலில் அமித் ஷா அன்புமணியை தொடர்பு கொண்டு பேசி, தேர்தலில் பா.ம.க. ஆற்றிய பணியைப் பாராட்டினார். ராமதாஸுடன் இணைந்ததற்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்தப் பாராட்டு அன்புமணிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
இந்தப் பின்னணியில் ‘தி கிரேட் நிகோபர்’ திட்டம் தொடர்பான விமர்சனம் வெளியாகியுள்ளது. பா.ம.க.வின் இந்தப் போக்கு வரும் காலங்களில் தேசிய அரசியலில் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றும் வாய்ப்பும் உள்ளது. தற்போது அன்புமணி தலைமையில் கட்சி ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் உருவாகியுள்ளதால், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!