தமிழில் விஜய், அஜீத் எப்படியோ அதற்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் ஒருபடி மேலாக ஆந்திர திரையுலகில் ஆதிக்கம் செலுத்துபவர் பவன் கல்யாண். சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே 2014-ம் ஆண்டு ஜனசேனா என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நேரடியாக அவரது கட்சி களமிறங்கியது. வெறும் ஆறு சதவித வாக்குகள் மற்றும் ஒரே ஒரு எம்எல்ஏ என அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதன்பின்னர் விவசாய போராட்டங்களை முன்னெடுத்து அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தினார் பவன் கல்யாண்.

கடந்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வென்றது. இதன்மூலம் தெலங்குதேசம் - ஜனசேனா - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பவன் கல்யாண் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் மத்தியில் ஆளும் பாஜக கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஆதரரிக்கும் முதல் நபராக பவன் கல்யாண் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: இலவசங்கள் வழங்குவதால் மக்கள் வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை - உச்ச நீதிமன்றம் கருத்து
அதேபோன்று திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவதாக புகார் எழுந்தபோது திருப்பதி வெங்கடாஜலபதியிடம் மன்னிப்புக் கோரும் விதமாக 11 நாள் விரதம் இருந்து கவனம் ஈர்த்தார். இதுபோன்ற தடாலடி செயல்களுக்கு சொந்தக்காரர் தான் பவன் கல்யாண்.

தற்போது கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணமாக அவர் தமிழகம் வந்துள்ளார். இன்று கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு நினைவுப்பரிசாக கதாயுதம் வழங்கப்பட்டது. அவர் கோயிலுக்குள் உள்ள ஜீவசமாதியில் வழிபாடு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது.. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ.பாரதி ஆவேசம்..