கோவை, டிசம்பர் 13: தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். உள்ளாட்சித் துறையில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், பொங்கல் தொகுப்புக்கு 3000 ரூபாய் வழங்குவது, மகளிர் உரிமைத் தொகை போன்றவை முதல்வர் ஸ்டாலினின் கடைசி அஸ்திரம் என்றும், வரும் தேர்தலில் மக்கள் தெளிவான முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை, அமலாக்கத்துறை (இடி) தமிழக டிஜிபிக்கு அக்டோபர் 2025-ல் ஒரு கடிதம் எழுதியதாகக் கூறினார். அதில், உள்ளாட்சித் துறையில் 150 பேரை குறிப்பிட்டு, வாட்ஸ்அப் உள்ளிட்ட ஆதாரங்களுடன் ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தந்தைக்கு சிலை வைக்கிறதா? பள்ளி கட்டிடங்களா? எது முக்கியம் ஸ்டாலின்? அண்ணாமலை கேள்வி
ஆனால், இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்றார். மறுபடியும் டிசம்பர் 3-ம் தேதி 258 பக்க கடிதம் எழுதப்பட்டது. அதில், அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வள துறையில் 1020 கோடி ரூபாய் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இன்ஜினியர்கள் பணி நியமனத்தில் ஒரு இன்ஜினியருக்கு 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கி 882 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் அண்ணாமலை கூறினார். ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. துறை இணையதளத்தில் குளறுபடிகள் வெளியாகியுள்ளன.

உதாரணமாக, கோவையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் 500 மதிப்பெண்களுக்கு 494 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால், 496 மதிப்பெண்கள் பெற்றவர் தோல்வியடைந்தார். கோவை, மதுரை, கரூர் மாவட்ட பட்டியல்களில் லஞ்சம் கைமாறியிருப்பதாக தெரிகிறது என்று அவர் விமர்சித்தார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் இதுவரை 77 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில் 12.5 சதவீதம் நீக்கம் அதிர்ச்சி அளிப்பதாக அண்ணாமலை கூறினார். கடந்த தேர்தல்களில் சரிபார்க்கப்பட்டும் பலர் நீக்கப்பட்டுள்ளனர். இது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் என்றார்.
பொங்கல் தொகுப்புக்கு 3000 ரூபாய் கொடுப்பது, மகளிர் உரிமைத் தொகை போன்றவை தான் முதல்வரின் கடைசி அஸ்திரம் என்று அண்ணாமலை தெரிவித்தார். வரும் தேர்தலில் மக்கள் தெளிவான முடிவு எடுப்பார்கள் என்றும் கூறினார். அடுத்த தேர்தல் நான்கு முனை போட்டியாக இருக்கும். திமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, விஜய், சீமான் ஆகியோர் போட்டியிடுவர். கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பேட்டி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தேர்தல் அரசியலை சூடுபிடுத்தியுள்ளன.
இதையும் படிங்க: இத்தாலியில் இன்வெஸ்ட் செய்ய ப்ளான்!! நேரு தரப்பில் நடந்த பேச்சு!! அமலாக்கத் துறை விசாரணையில் பகீர்!