அமெரிக்காவுடன் மீண்டும் ஒரு நேரடிப் போர் மூளுமானால், அது கடந்த காலங்களில் நடந்த மோதல்களை விட மிக நீண்ட காலம் நீடிக்கும் என்றும், அந்தப் போரின் கால அளவையோ அல்லது அது எப்போது முடிவுக்கு வரும் என்பதையோ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பால் முடிவு செய்ய முடியாது என்றும் ஈரான் ராணுவம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகப் போர் பதற்றம் தணியாமல் நீடித்து வருகிறது. ஈரானின் அணுசக்தி நிலைகள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்கப் படைகள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது கூடுதல் ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதற்கு நேரடியாகப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் மற்றும் மூத்த தளபதிகள் இன்று முக்கிய எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!
அதில், "வாஷிங்டன் நிர்வாகம் மீண்டும் ஒரு போர்த் தாக்குதலைத் தொடங்குமானால், அந்த மோதல் முந்தைய போர்களைப் போல குறுகிய காலத்தில் முடிவடைந்துவிடாது; அது மிக நீண்ட காலம் நீடிக்கும் தீவிரப் போராக மாறும். போரைத் தொடங்குவது குறித்து மட்டுமே அமெரிக்காவால் யோசிக்க முடியுமே தவிர, அந்தப் போரின் எல்லை என்னவாக இருக்கும், அதன் கால அளவு என்னவாக இருக்கும் அல்லது அது எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பால் ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக முழு வீச்சில் பதிலடி கொடுக்க ஈரான் ஆயுதப்படைகள் முழு தயார் நிலையில் உள்ளன" என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீண்டும் ஒரு போர் மூளுமானால் அது மத்திய கிழக்கு பிராந்தியத்தைத் தாண்டி சர்வதேச அளவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: கேள்வி கேட்டதால் ஆத்திரமா? பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்!! கிளம்பிய சர்ச்சை!!