கோவை: சட்டசபையில் ‘சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் தோப்புக்கரணம் போட்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
பிரார்த்தனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், “சங்க கால தமிழர்களும் சனாதன ஹிந்து தர்மத்தையே பின்பற்றினர். சனாதனம் என்பது ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதே சனாதனத்தின் அடிப்படை” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “அண்ணாத்துரை உள்ளிட்ட பெரியவர்கள் சனாதனக் கொள்கையை ஏற்றவர்கள். துர்கா ஸ்டாலினே சனாதனத்தைப் பின்பற்றுகிறார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஹிந்து தர்மத்தை விமர்சித்து வருகிறார். அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் எனக் காட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், இந்தக் கருத்தை உடனடியாகக் கண்டிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எந்த கட்சியில இருக்கீங்கன்னே மறந்துட்டீங்களா ஆதவ்?! உதயநிதி ஸ்டாலினை மிஞ்சிட்டீங்க! அண்ணாமலை கிண்டல்!

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகளும் சனாதனத்தை ஒழிப்போம் எனப் பேசுவதாகக் குற்றம் சாட்டிய அர்ஜுன் சம்பத், “அவர்கள் வன்மத்துடன் செயல்படுகின்றனர். முதல்வர் விஜய் இதற்கு பலியாகிவிடக் கூடாது. தமிழ் மண் இதை மன்னிக்காது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
உதயநிதியின் பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து அமைப்புகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. அர்ஜுன் சம்பத்தின் இந்தச் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சனாதன தர்மத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அர்ஜுன் சம்பத் மேற்கொண்ட இந்தப் பிரார்த்தனை ஹிந்து அமைப்புகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மறுபுறம், அரசியல் கட்சிகளிடையே இந்த விவகாரம் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!