தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல் என்று குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் சட்டமன்றத்தின் மாண்பு சீர்குலைந்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.சட்டமன்ற சபாநாயகர் பதவி சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய உன்னதமான அரசியல் சாசனப் பதவி என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக பகிரங்கமாக தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வதோடு, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டே வெளிப்படையாகக் கோரிக்கை விடுக்கிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது முதல்வர் ஜோசப் விஜய்க்கு கட்டளையிடுவது போலவே அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், இதற்கு முன்பு பல சபாநாயகர்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது சாதியையோ முன்னிலைப்படுத்திப் பேசியது கிடையாது என்று அவர் வலியுறுத்தினார். தவெக அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே முதல்வர் ஜோசப் விஜய், இது சிறுபான்மையினருக்கான அரசு என்று முன்னிலைப்படுத்திப் பேசுகிறார் என்றும், அமைச்சர் மரிய வில்சன் கையில் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "தம்பி இன்னைக்கு இல்ல.. சீக்கிரம் முடிச்சிடுவோம்-னு நெனச்சேன்"... ஆதவை வம்பிழுத்த பிரேமலதா..!
அத்துடன் நில்லாமல், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சட்டசபையில் குறிப்பிடுவதோடு, தமிழ் மொழியை விடத் தனது மதமே உயர்ந்தது என்கிறார் என்றும், சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.அவர்களின் மத நம்பிக்கைகளைத் தவறு என்று கூறவில்லை என்றாலும், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டமன்றத்திற்குள் பேசுவதும், செயல்படுத்துவதும் சட்டமன்றத்தின் மாண்பைக் குலைப்பதோடு, இந்த சட்டமன்றத்தையே ஒரு குறிப்பிட்ட மதம் நோக்கி நகர்த்துவது போல் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார்.
இது நல்லதல்ல என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக சபாநாயகர் பதவியில் இருப்பவர் இதைப் பற்றிப் பேசுவது முற்றிலும் தவறான விஷயம் என்றும் அவர் வலியுறுத்தினார்.எனவே இனியாவது சபாநாயகரும் மற்றும் தவெகவின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ரக்ஷாபந்தன் வாழ்த்து சொன்ன பிரேமலதா...! சட்டென சபாநாயகர் கொடுத்த ரியாக்ஷன்..! சட்டப்பேரவையில் கலகல..!