கேரளா, மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தல்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்கும் குழுக்களை கட்சியின் அமைப்புப் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியை மேற்கொள்ளும்.
அசாம் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக் குழுவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளரும் லோக்சபா உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு சொந்த கட்சிக்குள்ளேயே வலுக்கும் எதிர்ப்பு! பிரியங்கா கையில் பொறுப்பு தர காங். தலைவர்கள் திட்டம்!
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக லோக்சபா உறுப்பினர்களான இம்ரான் மசூத், சப்தகிரி சங்கர் உலகா, ஸ்ரீவெல்ல பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்களுக்கான குழுவுக்கு சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ். சிங் தியோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் உறுப்பினர்களாக யசோமதி தாகூர், ஜி.சி. சந்திரசேகர், அனில் குமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

கேரளாவுக்கான வேட்பாளர் தேர்வுக் குழுவுக்கு மதுசூதன் மிஸ்திரி தலைவராகவும், மேற்கு வங்கத்துக்கான குழுவுக்கு மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரள குழுவில் ராஜ்யசபா உறுப்பினர்களான சையத் நசீர் உசேன், நீரஜ் டாங்கி, அபிஷேக் தத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தக் குழுக்களுடன் கட்சியின் பொதுச்செயலர்கள் அல்லது பொறுப்பாளர்கள், அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டசபைக் கட்சித் தலைவர்கள், மாநில பொதுச்செயலர்கள் ஆகியோரும் வேட்பாளர்கள் தேர்வு பரிசீலனையில் பங்கேற்பார்கள் என்று கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் பிரியங்கா காந்தி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் டி.எஸ். சிங் தியோ தலைமையிலான குழு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இந்த மாநிலங்களில் வலுவான போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருவதற்கான அறிகுறியாக இந்த நியமனங்கள் பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: பிரியங்கா காந்தி மட்டும் பிரதமரா இருந்தா?! காங்., எம்.பிக்கள் சப்போர்ட்! ஓரம்கட்டப்படுகிறாரா ராகுல்காந்தி?!