பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி  'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் பீகார் மக்களை இழிவுபடுத்துவதாகவும், ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) அத்தகைய தலைவர்களை பீகாருக்குப் பிரச்சாரத்திற்காக அழைப்பதாகவும் சாடினார். கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளனர் என்றும்,  காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் தமிழ்நாட்டில், வேலைக்காகச் சென்றுள்ள பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் துன்புறுத்தப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். 
இதனைக் கண்டித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டிலுள்ள அனைவருக்குமான  பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடிஅடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும், ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கூறியிருந்தார். 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின். உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.
இதையும் படிங்க: கல்வி நிற்றல் அதிகரிப்பு! தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தும் முதல்வர்! அண்ணாமலை விமர்சனம்...!
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது. எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என பதிலடி கொடுத்துள்ளார். 
 
இதையும் படிங்க: தென்னை விவசாயிகள் பெருமூச்சு… வாடல் நோயை கட்டுப்படுத்த குழு..! அண்ணாமலை பெருமிதம்…!