தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயத்தில் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை குழுவினர் விவசாயிகளிடம் இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கோரிக்கையை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி இன்றைக்கு பல்வேறு நாடுகளுடன் ஏ.ஐ., திட்டத்திற்காக ஒப்பந்தம் போடுகிறார். நிதி நிர்வாகம், நிதி கொள்கை என்பது எல்லா மாநிலத்திற்கும் ஒன்று தான். இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக எடுத்து வெற்றி பெற முடியாமல், மாநில சுயாட்சியை கையில் எடுத்துள்ளார். அடைந்தால் தனி நாடு, இல்லையென்றால் சுடுகாடு என சொன்னவர்கள். சட்டம் பாயும் என்பதால், பயந்து அந்த கோரிக்கையை கை விட்டு விட்டார்கள். மாநில சுயாட்சி, மத்தியில் ஆட்சி செய்யும்போது கண்ணுக்கு தெரியவில்லை.
27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அதிகாரிகளை வைத்து அதிகாரம் செய்து கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்காதவர், மாநிலங்களின் சுயாட்சியை வாங்க போவதாக சொல்லுவது அப்பட்டமான ஏமாற்று வேலை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து கொண்டு அதிகாரத்தை பற்றி பேசுகிறார்கள். தமிழகத்தில் நிதி நிர்வாகம் சரி இல்லை. 10.50 லட்சம் கோடி கடன் உள்ளது. மக்களின் ஒவ்வொரு தலை மீதும், ஒன்றரை லட்சம் கடன் உள்ளது.
மாநில கட்சியை எல்லாம் நசுக்க பார்த்தது அன்று இருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி. மாநில கட்சியே நடக்கக்கூடாது என நினைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மாநில ஆட்சியையும், மாநில சுயாட்சியைப் பற்றியும் முதல்வர் பேசி வருகிறார். ஆனால் எல்லாருக்கும் சுயாட்சியும், எல்லோருக்கும் உரிமையும் கொடுப்பது பிரதமர் மோடி தான். தமிழ்நாடு, தமிழ் மக்கள் எப்பவுமே உழைப்பாளிகள். காங்கிரஸ் கட்சியில் உள்ள நிறைய தலைவர்கள் சூரியனை கும்பிடுவதற்கு பதிலாக விசில் அடிப்பது தான் பிடித்துள்ளது. மாணிக்கம் தாகூரை அடக்க முடியவில்லை. தமிழக கூட்டணிக்கே தலைமை தாங்குவதற்கு பரிதவித்து வருகிறார். அகில இந்திய கூட்டணிக்கு தலைமை தாங்க போகிறாரா? என்றார்.
இதையும் படிங்க: “அம்மா” என அழைத்த பாஜக தொண்டர்கள்... சட்டென சுதாரித்துக் கொண்ட தமிழிசை... என்ன சொன்னாங்க தெரியுமா?
தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் காரணம் இல்லை என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் மதவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மதவாதிகளுக்கு எல்லாம் ஒரு பேரடி இல்லை, நாங்க சட்டத்தை மதிப்பவார்கள். முதலில் திருமாவளவன் வேங்கைவயலுக்கு செல்லட்டும் வேங்கைவயலில், நலமாக தண்ணீர் குடிக்க வேண்டிய மக்கள் மலமாக தண்ணீர் குடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை என்கிறார்கள். உங்கள் கட்சியில் சண்டை போடுவது தொழில், பேஷன் தான். பா.ஜ.க கூட்டணி அடிமை கூட்டணி என்கிறார்கள். ஆனால் தி.மு.க. கூட்டணி தான் அடிமை கூட்டணி. திருமாவளவன் அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை என பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கிறார். எதை பற்றியும் கவலை இல்லை, நாங்கள் பலமாக உள்ளோம் என்றார்
இதையும் படிங்க: உள்ளாட்சி உரிமைகளை பறித்த ஸ்டாலின் சுயாட்சி பற்றி பேசுறாரு..! பொளந்து கட்டிய தமிழிசை ..!!