சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிலையில், அரசு நிகழ்ச்சிகளுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. முன்பெல்லாம் அரசு நிகழ்ச்சி என்றால் மக்கள் தொடர்பு அலுவலர் அழைத்துத் தகவல் சொல்வார். ஆனால் தற்போது எந்தத் தகவலும் அளிக்கப்படுவதில்லை என்று மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்தச் சூழலில் மேயர் ஆர். பிரியா பேசியதாவது: மாமன்றத்தில் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆனால் ஒவ்வொரு மாதமும் இதே குற்றச்சாட்டு எழுகிறது. அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான்.

ஒரு திட்டத்தைச் செயல்படுத்த ஓராண்டுக்கு மேல் ஆகும். அதுவரை அந்தத் திட்டத்தை மாமன்ற உறுப்பினர்கள் கண்காணித்துப் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களை அழைக்காமலேயே எம்.எல்.ஏ.க்கள் திறந்துவைக்கிறார்கள். அதிகாரிகள் அரசியல் சார்பின்றிச் செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க: சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!
மாமன்ற உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள் மட்டுமல்ல மேயரான எனக்கும் இதே நிலைதான். நான் முதல்வரின் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகக் கூறுகிறார்கள். முதல்வர் ரிப்பன் மாளிகைக்கு வருகிறார் என்றால் நேரத்தைக் கூறினால்தான் வர முடியும்.
அவர் வருகிறார் என்பதற்காகக் காலையிலிருந்து இரவு வரை ரிப்பன் மாளிகையில் இருக்க முடியுமா? மாமன்ற உறுப்பினர்களைப் புறக்கணிக்க அதிகாரிகளுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதா? இதற்கு மாமன்றத்தையே கலைத்துவிட்டுப் போகலாமே எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!