தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் விவரங்களை வெளியிடாமல், டில்லி மேலிட உத்தரவின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கட்சியின் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், உறுப்பினர்கள் எண்ணிக்கை, யார் இடம்பெறுவர் என்பது கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பயணத்தை முடித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், நேற்று முன்தினம் திடீரென சத்தியமூர்த்தி பவனில் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினார். மொத்தம் 41 செயற்குழு உறுப்பினர்கள், 9 எம்பி.க்கள், 17 எம்எல்ஏ.க்கள் மற்றும் அணி தலைவர்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், மூத்த தலைவர்கள் ப.ச். சிதம்பரம், கே.வி. அழகிரி, டாக்டர் செல்லக்குமார், எஸ். விஸ்வநாதன், மயூரா ஜெயகுமார் உள்ளிட்டோர் வரவில்லை. 9 எம்பி.க்களில் 3 பேர் மட்டும், 17 எம்எல்ஏ.க்களில் 11 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உத்தரவின்படி, அறக்கட்டளை நிர்வாகத்தை மேலிட பொறுப்பாளர், மாநிலத் தலைவர், சட்டசபை காங்கிரஸ் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களுடன் அமைக்க நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஷ்ரேயஸ் ஐயர் எப்படி இருக்காரு?! கேப்டர் SKY வெளியிட்ட அப்டேட்! கிரிக்கெட் ரசிகர்கள் ஏக்கம்!

ஆனால், விவரங்களை விவாதிக்காமல், தீர்மானத்தில் கையெழுத்து பெறப்பட்டது. முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, "அறக்கட்டளை உறுப்பினர்கள் எத்தனை? யார், யார்?" என விபரம் படிக்கக் கோரியபோது, கிரிஷ் சோடங்கர் மறுத்துவிட்டார்.
தங்கபாலு, "தமிழக காங்கிரஸ் பூத் மட்ட அமைப்பை இன்னும் நிரப்பவில்லை. அதில் கவனம் செலுத்த வேண்டும்" எனவும் கூறினார். அதற்குப் பதிலாக சோடங்கர், "125 தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். தி.மு.க. கூட்டணி தொடர்கிறது. விஜய் கட்சி கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம். டில்லி மேலிடம் சரியான முடிவெடுக்கும்" என வலியுறுத்தினார். விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச தயாராக இருந்த சில முன்னணி தலைவர்கள், "டில்லி வாய்ப்பூட்டு போட்டுவிட்டது" என அதிருப்தி தெரிவித்தனர்.
இந்தக் கூட்டம், கட்சியின் உள் மோதல்களையும், டில்லி கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சி வலுப்படுத்தும் நோக்கில் இது நடந்தாலும், விவரங்கள் மறைக்கப்படுவதால் கட்சியினரிடம் குழப்பம் நீடிக்கிறது.
இதையும் படிங்க: காலில் விழுந்தார் விஜய்... சோர்ந்து போயிட்டாரு மனுஷன்! மனைவி, மகளை இழந்த நபர் பேட்டி...!