டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற 'இண்டி' கூட்டணிப் பேரணியில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் திரளாதது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரசின் கூட்டணிப் பேச்சுவார்த்தை வலிமையைப் பாதிக்கக்கூடும் என்ற அரசியல் கணிப்பு எழுந்துள்ளது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, கடந்த 1-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணிக் கட்சிகள் இணைந்து பேரணி நடத்தின. இந்தப் பேரணியில் 10 லட்சம் பேரைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், பேரணியில் சுமார் 50 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றதாக டெல்லி போலீஸ் தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய உளவுப் பிரிவின் கணக்கின்படி, ஒன்றரை லட்சம் பேர் வரை பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் நிர்ணயித்த 10 லட்சம் என்ற இலக்கை இந்தப் பேரணி எட்டவில்லை.
இதையும் படிங்க: தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!
அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களில் சில மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் தயவின்றித் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாகக் கூறப்படுகிறது. டெல்லி பேரணியில் கூட்டத்தைக் கூட்டி தனது மக்கள் செல்வாக்கையும் அரசியல் பலத்தையும் நிரூபிக்கலாம் என அக்கட்சி எதிர்பார்த்தது.
ஆனால், பேரணியில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் திரளாததால், மாநிலக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும்போது காங்கிரசின் நிலைப்பாடு பலவீனமடையலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒதுக்கும் தொகுதிகளின் அடிப்படையிலேயே காங்கிரஸ் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
டெல்லி பேரணியில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றிருந்தாலும், காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் விடுத்த அழைப்புக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இதனால், கூட்டணிக் கட்சிகளிடம் அதிக தொகுதிகளைக் கோருவதற்கான காங்கிரசின் பேரம் பேசும் வலிமை குறையக்கூடும் என்ற கணிப்பு நிலவுகிறது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், டெல்லி பேரணி தேர்தல் கமிஷனுக்கு எதிரான போராட்டமாக மட்டுமின்றி, 'இண்டி' கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பேரணி பெறவில்லை.
இதன் தாக்கம் வட மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுடனான உறவிலும், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையிலும் எதிரொலிக்கலாம். தமிழகத்திலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அதிக தொகுதிகளைக் கோருவதற்குப் பதிலாக கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்வதற்கே காங்கிரஸ் முன்னுரிமை அளிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பேசக்கூட வாய்ப்பு தரல! பிரியங்கா காந்தியை புறக்கணிக்கும் ராகுல்காந்தி! பாஜக காரசார குற்றச்சாட்டு!