கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசின் ஏவலாளியாக, ஊதுகுழலாக செயல்பட்டு வரும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செல்வபெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையைத் தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா என்றும் டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அதிகாரிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத் துறைக்கு என்ன வேலை என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

எந்த மூல வழக்கின் முகாந்திரத்தின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றும் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமலாக்கத் துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்று கண்டனத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது. அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மதிக்காமல், தனது வரம்பை மீறி நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அமலாக்கத் துறையினரால், பி.எம்.எல்.ஏ எனப்படும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 911 வழக்குகளில் வெறும் 4.6 சதவீத வழக்குகளில் மட்டும் குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளதாக மோடி அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
கடந்த டிசம்பரில், மாநிலங்களவையில், காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, 1.1.2019 முதல் 31.10.2024 வரை அமலாக்கத் துறையினால் மொத்தம் 911 வழக்குகள் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால், இவற்றில் 42 வழக்குகளில் அதாவது வெறும் 4.6 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: புயலைக் கிளப்பிய டாஸ்மாக் முறைகேடு... ED-யை கேள்விகளால் துளைத்தெடுத்த உச்ச நீதிமன்றம்!
இதே காலகட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்கு 257 வழக்குகள் மட்டுமே, அதாவது 28 சதவீத வழக்குகள் மட்டுமே சென்றுள்ளதாக தனது பதிலில் கூறியிருந்தார். மீதம் உள்ள 654 வழக்குகள், அதாவது 71.7 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது யாரையோ திருப்திப்படுத்த அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை தொடுத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால், இவற்றில் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவும், எதிர்கட்சித் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது, மேலும் அவர்களின் எதிர்காலத்தை அடியோடு சிதைக்கும் கெட்ட நோக்கத்தோடு, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மோடி அரசு எந்தவித தயக்கமோ, வெட்கமோ இல்லாமல் தங்களுடைய சுயநலத்திற்கு பயன்படுத்தி வருவதை இத்தகைய செயல்கள் மூலம் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் இன்று கொடுத்துள்ள சாட்டையடிக்கு பிறகாவது, மோடி அரசு அமலாக்கத் துறையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக, தனது ஏவலாளியாக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்திகிறேன்" என்று அறிக்கையில் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கில் அதிரடி திருப்பம்... அமலாக்கத்துறை தலையில் ஓங்கி கொட்டிய உச்ச நீதிமன்றம்!