சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தபோது, முக்கியமாக மொழிக் கொள்கை, அரிசி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள்தான் பேசப்பட்டன. ஆனால், அதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியல் பெரும்பாலும் ஊழலை மையமாகக் கொண்டே இருந்து வந்தது.
ஆனால் தற்போது, ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் அரசைப் பற்றியே மக்கள் பேசுகிறார்கள். மக்களின் உணர்வுகள் என்ன, அவர்கள் அளிக்கும் கருத்துகள் என்ன, ஆட்சியில் எவ்வாறு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம்.
எனது தொகுதிக்கு வருபவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த மக்களும் தங்களது கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அதேபோல், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதிகளில் கிடைக்கும் மக்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த கருத்துகளின் அடிப்படையிலேயே தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவரானதுமே களேபரம்... வாண்டடாக அன்புமணி, சீமானை வம்பிழுத்த மாணிக்கம் தாகூர்...!
இதற்கிடையில், "திமுக இந்திரா காந்தியையே பார்த்த கட்சி. நேருவையே பார்த்த கட்சி. உங்களைப் பார்த்து பயப்படப் போவதில்லை" என்றும், "மாணிக்கம் தாகூர் நேற்று முளைத்த காளான்" என்றும் ஆர்.எஸ். பாரதி விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "எங்களால்தான் அவர் வெற்றி பெற்றார் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் இப்போது நான் பதிலளிக்க விரும்பவில்லை. இப்போது அதைப் பற்றி பேசினால் தேவையற்ற சர்ச்சை உருவாகிவிடும்.
வரும் ஜனவரி மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அதன் பிறகு, பொங்கல் நேரத்தில் அரை மீசை பாரதியிடம் அதைப் பற்றி விரிவாகப் பேசிக்கொள்வோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்று பதவியேற்கிறார் மாணிக்கம் தாகூர்! ராகுல் காந்தியை பிரதமராக்குவதே அடுத்த இலக்கு என உறுதி!