மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பாக ஓட்டு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கும் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தேநீர் கடை மற்றும் சாலையோர வியாபாரிகள், பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:
இந்தியா முழுவதும் பதினைந்தாம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுகிறது. வாக்கு திருட்டுக்கு எதிராக மாற்றங்களை தேர்தல் ஆணையம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வாக்கு திருட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் ஒரு கோடி கையெழுத்துக்களை வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு எடுத்துள்ளது. அதன் முதல் நிகழ்வாக திருப்பரங்குன்றம் பகுதியில் முருகணை வேண்டி விட்டு இந்த பணியை தொடங்குகிறோம்.
பாஜக எப்படி வாக்கு திருட்டுகளை செய்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது என பொது மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் அனைத்து ஆவணங்களையும் வைத்து எப்படி இந்த வாக்குத்திருட்டு நடைபெற்றது எனவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்ததால் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நாங்கள் போராடியதன் விளைவாக பாராளுமன்றம் நடைபெறாமல் போனது.
இதையும் படிங்க: பத்த வச்சிட்டீயே பரட்டை.... NDA கூட்டணிக்குள் குண்டைப் போட்ட அண்ணாமலை... அமித் ஷாவிற்கு பறந்த ரிப்போர்ட்...!
அங்கு அரசு இதை விவாதிக்க விரும்பாததால், மக்கள் மன்றத்தில் கையெழுத்து இயக்கமாக கொண்டு வந்திருக்கிறோம். பெங்களூர் மத்திய தொகுதிக்கான ஆதாரத்தை ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார். அதற்கே இந்தியா அதிர்ந்து போனது. மேலும் ஆதாரங்களை வெளியிடுவோம் என்று சொல்லி இருக்கிறார். அது ஹைட்ரஜன் பாமாக இருக்கும் என சொல்லி இருக்கிறார். மக்களின் வாக்குகளை திருடி எப்படி மோடி ஆட்சி நடத்துகிறார் என்பதை வெளிப்படுத்துவதற்கான போராட்டம் மக்களாட்சிக்கான இந்த ஆயுதத்தை திருடி இருக்கும் மோடி அரசாங்கத்தை கண்டித்து இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறது.
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர் வாக்கு குளறுபடி குறித்த கேள்விக்கு: அந்தத் தேர்தலில் நானும் பாஜகவின் கிரண் ரிஜூவும் தான் ஏஜென்ட் ஆக இருந்தோம். அதில் எந்தவித கட்சி கட்டுப்பாடோ, கொறடா கட்டுப்பாடோ இல்லை. இந்தியா கூட்டணியின் வாக்கு என்பது 315 பேர் இந்தியா கூட்டணி அல்லாத மற்ற கட்சிகளின் 68 வாக்குகள் இருந்தது. அந்த வாக்குகள் எங்களுக்கு வந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். அவர்களில் 18 பேர் வாக்களிக்காமல் தவிர்த்தார்கள் மற்றவர்கள் ராதாகிருஷ்ணனுக்காக ஆதரவளித்தார்கள். எங்களின் 315 வாக்குகளில் 300 வாக்குகள் கிடைத்தது, 15 வாக்குகள் செல்லாத வாக்குகள்.
வாக்கு சீட்டில் அந்த வேட்பாளருக்கு நேராக ஒன்று என எழுத வேண்டும். மற்ற இடத்தில் எழுதினாலோ அல்லது டிக் செய்தாலும் செல்லாது. அது போல 15 வாக்குகள் எங்களுக்கு செல்லாமல் போனது. நாங்கள் இதில் எந்த குற்றசாட்டும் சொல்லவில்லை. கிரண் ரிஜூ இதில் இந்தியா கூட்டணி உறுப்பினர்களுக்கு நன்றி சொல்கிறோம் என சொன்னார். மேலும் ஒரு சில பாஜக ஆதரவு பத்திரிகைகளில் கட்சியில் இருந்து வாக்குகள் மாறி இருக்கிறதாக சொன்னார்கள். அப்போதுதான் எங்கள் 315 வாக்குகளில் 300 வாக்குகள் 15 வாக்குகள் செல்லாத வாக்குகள். அந்த 15 வாக்குகளை நாங்கள் திருட்டு என்று சொல்லவில்லை நீங்கள் ஆடுவதை பார்த்தால் இதில் திருட்டு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. நீங்கள் வாக்கு திருட்டு செய்கிறீர்களா என கேள்வி கேட்டவுடன் அமைதியாகி விட்டார்கள்.
தவெக தலைவர் சனிக்கிழமை பிரச்சாரம் மற்றும் கூட்டம் குறித்த கேள்விக்கு: அரசியல் தலைவர்களுக்கு கூட்டம் வரும். கிருஷ்ணகிரியில் முதல்வருக்கும் கூட்டம் வந்தது. அரசியலுக்கு வந்ததற்கு மகிழ்ச்சி. கூட்டம் வந்ததற்கு மகிழ்ச்சி. மக்கள் மன்றத்தில் அவருடைய கருத்துக்களை சொல்கிறார். அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது மக்கள் கையில் உள்ளது.
பிரச்சாரம் என்பது ஒவ்வொருவரின் விருப்பம் அதை குறித்து பேசுவது சரியாக இருக்காது. ஜெயலலிதா அம்மையார் மதியம் 2 மணிக்கு மேல் மாலை தான் பிரச்சாரம் மேற்கொள்வார். மக்கள் எதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
2026 தேர்தலில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதற்கு குறித்த கேள்விக்கு: பாஜக போற போக்கை பார்த்தால் கடை காலியாகி விடும். அமித்ஷா ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லும் அம்மையாரிடம் 30 நிமிடம் பேசியிருக்கிறார்கள் என கதை வந்த போதே தெரிந்துவிட்டது. செங்கோட்டையனை பார்ப்பதாக சொல்கிறார்கள் ஜெயலலிதாவின் மகள் என சொல்லும் பெண்ணை பார்க்கிறார்கள். அமித்ஷா அதிமுகவை என்னதான் செய்ய வேண்டும் என நினைக்கிறார் என தெரியவில்லை.
அதிமுக அமித்ஷாவின் அதிமுகவாக மாறிவிட்டது இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என அவர் நினைக்கிறார் என தெரியவில்லை. செங்கோட்டையனை ஒரு கூட்டணியாக மாற்ற வேண்டும், ஓபிஎஸ் ஏற்கனவே ரோட்டில் நிறுத்தி விட்டார்கள். அதிமுகவின் கடைசி காலம் வந்துவிட்டது, எப்போது அழைத்தாலும் செல்லக்கூடிய சூழலில் இபிஎஸ் இருக்கிறார். அதிமுகவின் நேரம் ஏறக்குறைய முடியும் தருவாய்க்கு வந்து விட்டது. வருகிற தேர்தலில் அதிமுகவை முடித்து வைக்கக்கூடிய பெருமானாக அமித்ஷா இருப்பார்.
அதிமுகவை ஒன்றிணைத்து திமுகவை வீழ்த்துவோம் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு: ஜெயலலிதாவின் மகள் என்பவரை அழைத்து அமித்ஷா பேசியிருக்கிறார். இது குறித்து நயினார் நாகேந்திரன் என்ன சொல்கிறார். அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள். மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ்-க்கு அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை தன்னை ஜெயலலிதாவிற்கு பிறந்த மகள் என சொல்லும் பெண்ணை அழைத்து 30 நிமிடம் பேசி இருக்கிறார்.
ஒவ்வொரு மானமுள்ள அதிமுககாரரும் யோசிக்க வேண்டிய விஷயம் இதுதான். அமித்ஷா என்கிற நபர் அதிமுகவை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலமாக காட்டிவிட்டார் அதன் பிறகும் நாங்கள் தான் அந்த பேருந்தில் நிற்போம் என தொங்கி சென்றால் அதற்கு மேல் அதிமுக குறித்து என்ன சொல்வது.
விஜய் மற்றும் முதல்வர் மாறி மாறி விமர்சிப்பது குறித்த கேள்விக்கு: பொது களத்திற்கு வந்து பேசத் தொடங்கி இருக்கிறார். பல கருத்துக்கள் வரும் முதல்வரை பொறுத்த அளவில் சொன்ன வாக்குறுதிகளையும் சொல்லாத வாக்குறுதிகளையும் செய்திருக்கிறார்கள். 384 வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம். இன்றைக்கு துவங்கப்படும் திட்டங்கள் உட்பட வாக்குறுதிகளையும் இல்லாத திட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்த கேள்விக்கு: நான் பார்க்கவில்லை அமித்ஷா பார்த்தாரா, பாஜகவினர் பார்த்தார்களா என கேட்க வேண்டும் அது அமித்ஷா மகன் ஜெய்ஷாவால் நடத்தப்பட்ட போட்டி. அவர்கள்தான் முதலில் சிந்துர் போர் நடைபெற்றவுடன் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம், ட்ரெயின், பேருந்து கூட மாட்டோம் எனக் கூறினார்கள். இப்போது அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா சொன்னவுடன் கிரிக்கெட் போட்டி மற்றும் பார்த்திருக்கிறார்கள் மானமுள்ள பாஜகவினர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என மாணிக்கம் தாகூர் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவின் அடிமடியில் கைவைத்த அமித் ஷா... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி...!