சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி தமிழக காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய ஓபிசி பிரிவு தலைவர் அனில் ஜெய்ஹிந்த், காங்கிரஸ் அகில இந்திய செயலர் ஜிதேந்திர பாகேல், தமிழக ஓபிசி பிரிவு தலைவர் நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பிறகு, சென்னையில் தங்கியிருந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தியை அனில் ஜெய்ஹிந்த், ஜிதேந்திர பாகேல், நவீன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு புகைப்படங்களை பிரவீன் சக்கரவர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாஜக போன்ற மதசார்புள்ள கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதாக ஓபிசி பிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், திமுக காங்கிரஸை துச்சமாக மதிப்பதாகவும், கட்சியை உதாசீனப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: தவெகவுடன் தான் கூட்டணி வேணும்! அடம்பிடிக்கும் காங். தொண்டர்கள்! திருச்சி வேலுசாமி பகீர்!
குறிப்பாக, காங்கிரஸுக்கு உரிய தொகுதிகளை ஒதுக்க திமுக தயாரில்லை என்றும், அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை திமுக கூட்டணியைத் தொடர விரும்பவில்லை என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்குப் பதிலாக, வளர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரவீன் சக்கரவர்த்தியின் தவெக தலைவர் விஜய்யுடனான தொடர்ச்சியான முயற்சிகள் கட்சியினருக்கு தெரியும் என்றும், அந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்கு தமிழக காங்கிரஸார் அனைவரும் ஆதரவளிப்போம் என்றும் நிர்வாகிகள் உறுதியளித்தனர். இந்தக் கருத்துகளை ராகுல் காந்திக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
காங்கிரஸ் வட்டாரங்களின்படி, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நவீன் அவரது ஆதரவாளர் என்பதால், அவரும் ஆட்சிப் பங்கு கோரிக்கையை ஆதரிக்கிறார். நவீனின் ஏற்பாட்டிலேயே இந்தச் சந்திப்பு நடந்தது என்றும், அதில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பு தமிழக காங்கிரஸில் உட்கட்சி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சியில் பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும்!! ஒரே மேடையில் தவெக - காங்., நிர்வாகிகள்! தமிழக அரசியலில் பரபரப்பு!