சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுகளில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை அதிர வைத்துள்ளது. “ஆட்சியில் பங்கு தர வேண்டும்; இல்லையெனில், ராஜ்யசபாவில் 5 எம்.பி. பதவிகள் தர வேண்டும்” என்ற நிபந்தனையை விதித்துள்ள காங்கிரஸ், தி.மு.க. மேலிடத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ராஜ்யசபாவில் தனது எண்ணிக்கையை அதிகரிக்க வியூகம் வகுக்கும் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் த.வெ.க.வுடன் (தமிழக வெற்றிக் கழகம்) பேச்சுகளையும் தொடங்கியுள்ளது. இது தி.மு.க. கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி, லோக்சபாவில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், ராஜ்யசபாவில் அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சியாக இருந்தது. இதனால், பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு இடைஞ்சல் உண்டாக்குவது எளிதாக இருந்தது.
இதையும் படிங்க: 'Blast-uh Blast-uh' புதுச்சேரி, கேரளாவிலும் தவெக + காங்., கூட்டணி!! விஜய்க்கு ராகுல்காந்தி கொடுத்த பெரிய ஆஃபர்!!
ஆனால், இப்போது கர்நாடகா, தெலங்கானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதனால், 245 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் காங்கிரஸுக்கு வெறும் 27 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ராஜ்யசபா சீட்களைப் பெறுவது அதன் ஒரு பகுதி.
நீண்ட காலமாக, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துத் தான் தி.மு.க. ஆட்சி அமைத்துள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸின் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி அமைந்தது.
ஆனால், காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்கு தரப்படவில்லை. அடுத்த 2011 தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றாலும், காங்கிரஸுக்கு ஆட்சி பங்கு கிடைக்கவில்லை. இப்போது 2026 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு தராது என்பது காங்கிரஸுக்கு தெரியும். இதனால், கூட்டணி பேச்சுகளில் காங்கிரஸ் கடுமையாக நிபந்தனை விதித்துள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. 39 தொகுதிகளில் 9 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கியது. அதுபோல, ராஜ்யசபாவில் 18 தொகுதிகளில் 4 அல்லது 5 தொகுதிகளை (நான்கில் ஒரு பங்கு) காங்கிரஸுக்கு தர வேண்டும் என கோரியுள்ளது.
இதோடு, அரசு வழக்கறிஞர்கள் நியமனம், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம், வாரிய தலைவர் பதவிகள் உள்ளிட்ட நியமனங்களில் நான்கில் ஒரு பங்கை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு உடன்படாவிட்டால் கூட்டணி தொடராது என காங்கிரஸ் மேலிடம் உறுதியாக உள்ளது.
இந்த எதிர்பாராத கோரிக்கைகளால் தி.மு.க. மேலிடம் அதிர்ச்சியடைந்துள்ளது. “அது சாத்தியமில்லை” என்று தி.மு.க. தலைமை தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால், காங்கிரஸ் விடுவதாக இல்லை.
தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், த.வெ.க. தலைவர் விஜய்யுடன் பேச்சுகளைத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி தவிர காங்கிரஸுக்கு மாற்று இல்லை. இப்போது த.வெ.க. இருக்கிறது. இது தி.மு.க.வுக்கும் தெரியும். அதனால் தான், எங்கள் ஐவர் குழுவை ஸ்டாலினே சந்தித்தார்” என்றார்.
காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தி.மு.க.வுடன் பேச்சுகளைத் தொடங்கியுள்ளது. இந்த நிபந்தனைகளால் தொகுதி பங்கீடு பேச்சுகளில் தி.மு.க. தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் ஒப்புக்கொள்கின்றனர். 2026 தேர்தலில் காங்கிரஸ் 30-35 தொகுதிகளை கோருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தி.மு.க. கூட்டணியின் இன்னும் ஒரு சவாலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: "முன்னேற வேண்டிய நேரம் இது": இனி கிரிக்கெட் மட்டுமே.. ஸ்மிருதி மந்தனா வெளியிட்ட திடீர் அறிவிப்பு!