புதுடெல்லி: நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. செங்கோட்டையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதையொட்டி, டெல்லி முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களும் இடம்பெறுவதால், சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், டெல்லி போலீசார் ரோந்து, வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் மட்டும் பெண் போலீசார் உள்ளிட்ட 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டெல்லியின் எல்லைப் பகுதிகள், முக்கிய சந்திப்புகள் மற்றும் நகருக்குள் நுழையும் முக்கிய சாலைகளில் சுமார் 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 1947க்கு பிறகு முதல் முறை! 92 மாவோயிஸ்ட் கிராமங்களில் ஆகஸ்ட் 15ல் பறக்கப் போகும் தேசியக் கொடி!

இந்த சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து போலீசார், ரோந்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். வாகனங்கள் மட்டுமின்றி, வாகன நிறுத்துமிடங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதான கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை களத்தில் நேரடியாக ரோந்து மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் ட்ரோன்கள் மூலமாக வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. தரை வழி சோதனைகளுடன் இணைந்து இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லிக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் முக்கிய பாதைகள், எல்லைப் பகுதிகள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விரைவான பதில் நடவடிக்கைகளுக்கு போலீசார் தயார்நிலையில் உள்ளனர்.
இதனால், ஆகஸ்ட் 15-ம் தேதி வரை டெல்லியில் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையில் இந்த ஆண்டு மாறப்போகும் முக்கிய நடைமுறை! சுதந்திர தின நிகழ்ச்சியில் புதிய மாற்றம்!