தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சில தொகுதிகள் காலியான நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித்தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
இந்த இரண்டு தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்களால் வெற்றி பெறப்பட்டவை. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வெற்றி பெற்று பின்னர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் தொகுதிகள் காலியாயின. இதனால் இந்த இடைத்தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான சோதனையாக மாறியுள்ளது.

இந்தப் பின்னணியில் திமுக முதலில் வேட்பாளர்களை அறிவித்தது. மதுராந்தகம் தொகுதிக்கு வழக்கறிஞரும் கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ. பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் களம் இறக்கப்பட்டுள்ளனர். பரந்தாமன் முன்பு எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர். சுகன்யா களப்பணியில் ஈடுபட்டு வரும் உள்ளூர் முகம். இந்த அறிவிப்புக்குப் பின்னர் கட்சி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: நாடக கம்பெனி திமுக... கட்டுமர கதை வேணாம்..! விளாசிய தவெக..!
தற்போது திமுக இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. மதுராந்தகம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசனும் மாவட்டச் செயலாளர் சுந்தரும் பொறுப்பேற்றுள்ளனர். தாராபுரத்திற்கு முன்னாள் அமைச்சர் சாமிநாதனும் மாவட்டச் செயலாளர் பத்மநாபனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் கட்சிக்குள் பணிகளை ஒருங்கிணைத்து களப்பணியை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொறுப்பாளர்கள் தொகுதி அளவிலான நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சார உத்திகளை வகுத்து, வாக்காளர்களை நேரடியாக சந்திக்கும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதையும் படிங்க: மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!