சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் திமுக தலைமை கறார் காட்டத் தொடங்கியுள்ளது. சிட்டிங் எம்.பி.க்கள் உள்ள மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் (மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்) சட்டமன்றத் தொகுதிகளை கேட்பதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கை பேச்சு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போது சிறிய கட்சிகளுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. “200 தொகுதிகள் நிச்சயம், 200க்கு மேல் லட்சியம்” என்ற முழக்கத்துடன் இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க திமுக தீவிரமாக திட்டமிட்டுள்ளது.
ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும்போது, திமுக நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்படுவதை தவிர்க்க தலைமை முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் உள்ள மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் உள்ள திருப்பூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்கக் கூடாது என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியில்லை! தவாகா வேல்முருகன் அறிவிப்பு!! ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பு!

மதுரை மேற்கு தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுள்ள நிலையில், அங்கு அமைச்சர் மூர்த்தி ரூ.800 கோடிக்கு மேல் நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால், அது திமுக வெற்றி பெறும் தொகுதி என்று மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். இதேபோல், ஒரு எம்.பி. தொகுதிக்கு சமமான 6 சட்டமன்றத் தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்தால், திமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
பல மாவட்டங்களில் இருந்து திமுக தலைமைக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் நடத்திய வேட்பாளர் நேர்காணலின்போதும், “திமுக ஜெயிக்கும் தொகுதிகளை கூட்டணிக்கு கொடுக்க வேண்டாம்” என்று நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்தே திமுக இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.
திமுகவினர் கூறுகையில், “கூட்டணி கட்சிகளுக்கு மற்ற மாவட்டங்களில் தொகுதி கொடுக்கலாம். ஆனால் சிட்டிங் எம்.பி.க்கள் உள்ள மாவட்டங்களில் தொகுதி கொடுத்தால், உள்ளூர் நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தி ஏற்படும். அதை தவிர்க்கவே இந்த முடிவு” என்றனர்.
இந்த முடிவால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், திமுக தனது இரண்டாவது முறை ஆட்சியை உறுதி செய்யும் வகையில் இந்த கறார் முடிவை எடுத்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தொகுதி பங்கீடு இன்னும் பரபரப்பாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த தொகுதிகள்லாம் எங்களுக்கு ஒதுக்கிருங்க! லிஸ்ட் போட்டு நீட்டிய கூட்டணி கட்சிகள்! குழப்பத்தில் திமுக!