சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது அடுத்த தேர்தல் அறிக்கையில் கடந்த தேர்தலில் நிறைவேற்றாத 150-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மீண்டும் சேர்க்க முடிவு செய்துள்ளதாகும். இது வாக்காளர்களிடையே கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இப்போது அவற்றை மீண்டும் அறிக்கையில் இணைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக-வின் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் ஒருவர் இது குறித்து பேசுகையில், "எங்கள் கட்சி எப்போதும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்துகிறது. கடந்த தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் சிலவற்றை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்த முறை 500-க்கும் மேற்பட்ட புதிய வாக்குறுதிகளுடன் வருகிறோம்.
இதையும் படிங்க: திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள்!! மாநாட்டில் உடைத்து பேசிய மா.கம்யூ.!! கூட்டணி கட்சியே இப்படியா?
அதில், நீட் தேர்வை ரத்து செய்வது, வீட்டு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவது, மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடுவது, டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பது, சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்வது போன்ற முக்கியமானவை மீண்டும் இடம்பெறும்" என்று கூறினார்.
மேலும், எல்லோருக்கும் வீடு வழங்குவது, கல்விக் கடன் தள்ளுபடி, தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்துவது, கர்ப்பிணி பெண்களுக்கு 24,000 ரூபாய் உதவித்தொகை, அரசுத் துறைகளில் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவது, கச்சத்தீவை மீட்டெடுப்பது, கூவம் ஆற்றை சீரமைப்பது, காவிரி-குண்டாறு ஆறுகளை இணைப்பது, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் மீண்டும் சேர்க்கப்படும் என்று அவர் விளக்கினார்.

இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. "திமுக கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. இப்போது அதே வாக்குறுதிகளை மீண்டும் கொடுத்து மக்களை ஏமாற்ற முயல்கிறது" என்று அஇஅதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பாஜகவும் இதை "மக்களை முட்டாளாக்கும் தந்திரம்" என்று சாடியுள்ளது. மறுபுறம், திமுக ஆதரவாளர்கள் இதை "மக்கள் நலனுக்கான தொடர் போராட்டம்" என்று பார்க்கின்றனர். "மத்திய அரசின் தடைகள், நிதி பிரச்சினைகள் காரணமாக சில வாக்குறுதிகள் தாமதமாகின. இப்போது அவற்றை நிறைவேற்றுவதற்கான உறுதியுடன் வருகிறோம்" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் வாக்குறுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2021 தேர்தலில் திமுக-வின் அறிக்கை மக்களை ஈர்த்து வெற்றி பெற உதவியது. ஆனால் நிறைவேற்றாத வாக்குறுதிகள் காரணமாக விமர்சனங்கள் எழுந்தன.
உதாரணமாக, நீட் ரத்து போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது, ஆனால் முழு வெற்றி கிடைக்கவில்லை. அதேபோல், மின் கட்டண உயர்வு, டாஸ்மாக் கடைகள் அதிகரிப்பு போன்றவை மக்களின் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக, இந்த வாக்குறுதிகளை மீண்டும் கொடுப்பதன் மூலம் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காது!! திமுகவுக்கு இதான் கடைசி தேர்தல்! இபிஎஸ் திட்டவட்டம்!!