திராவிட மாடல் ஆட்சிக்காலம் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “திராவிட மாடல்’ ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இன்றோடு (6.5.2025) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, 5ஆம் ஆண்டு ஆட்சி தொடருகிறது. இந்தியாவின் ஒப்பற்ற முதல்வரான ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட ஆட்சி, எடுத்துக்காட்டான ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும். நீதிக்கட்சி முதலமைச்சர் பனகால் அரசர் தொடங்கி, அண்ணா, கருணாநிதி ஆகிய முதலமைச்சர்கள் ஏற்படுத்திய திராவிடக் கட்டுமானத்தின்மீது பன்மடங்கு விரிவாக்கத்துடன் உள்ள மீட்சிக்கான ஆட்சியில் ஒவ்வொரு நாளும் சாதனை! சாதனை!! சாதனை!! என்றே நகர்ந்துள்ளது என்பது கொள்கை எதிரிகளையும் திகைக்க வைக்கும் – அவர்களைத் திணறடிக்கும் சாதனைக் குவியல் ஆகும்!

எல்லாத் துறைகளும் எழுச்சி பெற்று தத்தம் பங்களிப்பை, பற்பல மாவட்டங்களிலும் திறம்பட செய்து வருகின்றன. குறிப்பாக, மருத்துவமும், கல்வியும், உயர்கல்வி, தொழிற்கல்வி உள்பட வேகமான வியக்கத்தக்க வேக நடை போட்டு அகிலத்தின் பார்வைக்கும், பாராட்டுக்கும் உரியதாகி வருகிறது. மக்களது அறிவை விரிவு செய்ய, புதிய பல்கலைக் கழகங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன, தமிழ்நாட்டில்! முதலமைச்சர் சட்டமன்றத்தில் ஆற்றிய பேருரையில் குறிப்பிட்டதுபோல, அவரது வெற்றிப் பயணத்தை நடத்தவிடாது தடுக்க, ‘‘பாம்புகளும், நரிகளும், அகழிகளும், தடுப்புச் சுவர்களும்’’ இருந்தாலும், அவற்றைத் தடுத்தாளும், அவர் ஆட்சியின் தடந்தோள்கள் தடைக்கற்களைச் சுக்கல் சுக்கலாக்கி, உடைத்து வீசி, சமூகநீதி, அறிவியல், பகுத்தறிவு, சுயமரியாதைப் பாதையில் தடைபடா வேகநடையோடு, எதிரிகள் மருண்டோடும் மகத்தான சரித்திர சாதனை ஆட்சியாக கடந்த 4 ஆண்டுகள் ஓடின!

இடையில் ஒன்றிய அரசின் தொடர் ஒத்துழையாமை; மாநில அமைச்சர்கள் அருகில் இருந்தும் அவர்களுக்கு உரிய மரியாதைகூட தராது ‘அழுகிறார்கள்; நன்றாக அழுங்கள்’’ என்று ஒரு தரமற்ற பேச்சை (ராமேசுவரத்தில்) பேசி, தான் வகிக்கும் பிரதமர் பதவியின் மாண்பையும் சீர்குலைத்துவிட்டு, ‘‘கூட்டுறவுக் கூட்டாட்சி’’ (Cooperative Federation) என்ற பொய்ப் பாட்டை பாடி வரும் நிலை. ஆளுநர் என்ற பெயரால் அடாவடித்தனத்தால் அப்பதவியின் விழுமியத்தை விரட்டியத்த ஓர் ஆளுநர். தமிழ்நாட்டு நலன், உரிமைகளை அடகு வைத்த அடிமைகளை மிரட்டி, கூட்டணிகளை, கொள்கையற்ற தன்மையில் கூட்டி மிரட்டிப் பார்ப்பது.
இத்தகைய அரசியலை அன்றாடம் எதிர்கொண்டு, அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, தனது லட்சிய வெற்றிப் பயணத்தை – பேச்சால் அல்ல – செயல்திறனால் நாளும் சரித்திர முத்திரை பதித்து வருகிறார் நமது சரித்திர நாயகரான ‘திராவிட மாடல்’ முதலமைச்சர்!
இதையும் படிங்க: நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் அடுத்த முதல்வர் என்கிறான்..! மு.க.ஸ்டாலின் வேதனை..!

குடந்தையில் ‘‘கலைஞர் (நூற்றாண்டு) பல்கலைக் கழகம்’’ உருவாக்கி வருகிறார்! இவ்வுரிமை – பல்கலைக்கழகங்களைத் தொடங்குவது – தேர்வுகளை நடத்துவது, இந்திய அரசமைப்புச் சட்டம் 7 ஆவது அட்டவணைப் பட்டியல்படி, மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ள தனி உரிமையாகும்.
ஒன்றிய அரசுக்குரிய ஒன்றிய அரசு பட்டியலில், அவ்வுரிமை ஒன்றிய அரசுக்குக் கிடையாது என்பதே அரசமைப்புச் சட்டப்படி உள்ள நிலை!
பலர் அறியாதவர்களாக உள்ளதால், ‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலி வேஷம் போட்டு பொய் ஆட்டம் ஆடுகின்றான்’’ என்று புரட்சிக்கவிஞர் பாடியது போல் நிலை இப்போது! அரசமைப்புச் சட்ட அதிகாரப் பங்களிப்புப்படி மாநிலங்களுக்கே அதிகாரம்!
‘ஒரே தேர்வு இந்தியா முழுவதும்’ என்பது அரசமைப்புச் சட்டப் பிரிவுப்படி முற்றிலும் தங்களுக்கு இல்லாத அதிகாரத்தை – பல்கலைக் கழகங்களின் உரிமைகளைப் பறித்து வைத்து, இத்தனை ஆண்டுகளாக நடத்தும் அரசமைப்புச் சட்ட துஷ்பிரயோகம் ஆகும். ‘விடியல் ஒரு நாள் ஏற்படுவது உறுதி!’
பல்கலைக் கழக வரலாற்றில் நமது கலைஞர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம். குடந்தையில் முகிழ்க்கும் பல்கலைக் கழகத்திற்கு அவர் பெயர் வைத்திருப்பது முற்றிலும் பொருத்தமானதாகும் – காலத்தின் கட்டாயமுமாகும்." என்று அறிக்கையில் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தலில் இதுதான் நடக்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரூடம்!!