தமிழக அரசின் ‘கனவு இல்லம்’ திட்டம் ஊரக ஏழைகளின் வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கப்பட்டாலும், தற்போது கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் உள்ள குழப்பம் பயனாளிகளை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் எட்டு லட்சம் குடிசைகள் இருப்பது அரசு நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்ததை அடுத்து, 2024-25ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவது என்ற இலக்குடன், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி 2024-25இல் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.
இந்நிலையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் மீண்டும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டுக்கு முன்பாகவே முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓ.பி.எஸ்-ஐ வச்சுக்கலாமா வேணாமா? அதிமுகவுக்கு அட்வாண்டேஜா? குழம்பி தவிக்கும் திமுக தலைமை!

ஒரு வீட்டுக்கு மானியமாக 3.5 லட்சம் ரூபாயும், தனி கழிப்பறைக்கு 12,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த மானியம் நான்கு தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, கமிஷன், தாமதமான நிதி வெளியீடு போன்ற காரணங்களால் ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ள பல வீடுகள் முடியாமல் தவித்து வருகின்றன.
இந்நிலையில் நிதியாண்டு முடியும் நிலையில் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள், 3,500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என்ற அறிவிப்பு அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட ஒரு லட்சம் வீடுகளை முடிக்க முடியாத நிலையில், புதிதாக ஒரு லட்சம் வீடுகள் எப்படிக் கட்டப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதி ஒதுக்கீடு எப்போது, எப்படி வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் பலர் கடுமையான நிதிச் சுமையை சந்தித்து வருகின்றனர். கட்டுமானப் பணிகள் முடியாமல் இருப்பதால், குடிசைகளில் தொடர்ந்து வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: அமித்ஷா பேச்சுக்கு கட்டுப்பட்டது ஏன்? டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் உடைத்து பேசிய உண்மை!