அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்கை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
மழை பெய்தாலே இந்த வேளச்சேரி பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சிக்கு வந்த உடனே சொன்னார்கள். குறிப்பாக சென்னை மாநகரத்தில், அதிலும் வேளச்சேரியில் எங்கும் தண்ணீர் தேங்காது என உறுதியளித்தார்கள். ஒரு பெண்மணி சொன்னது போல — “ஸ்டாலின் வந்தாரு, நீச்சல் அடிக்க விட்டாரு” — என்பதே இன்றைய நிலைமை. அது அந்த பெண்மணியின் உள்ளத்திலிருந்து வந்த உண்மையான வார்த்தை. அதுதான் இன்று சென்னை மாநகராட்சியும், வேளச்சேரியும் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?.
இங்கு பெரும்பாலான மக்கள் தொழில் செய்து தான் வாழ்கிறார்கள். சிலர் கடை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்; சிலர் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினரும் இந்த ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வியாபாரம் செய்வோர் சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடியாத நிலை. கடையில் பொருள் வாங்கியவர் விலை கேட்டால் மிரட்டப்படுகிறார். உணவகங்களில் சாப்பிட்ட பிறகு பணம் கேட்டால் அடிக்கும், உதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தேர்தலால் மாற வேண்டும்.
இதையும் படிங்க: "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!
அண்ணா திமுக ஆட்சியில் வியாபாரிகள் பயமின்றி வியாபாரம் செய்தனர். ஜெயலலிதா அவர்கள் இருந்தபோதும், அவர் மறைந்த பின்னரும், வியாபாரிகளும், வேலைக்குச் செல்வோரும் நிம்மதியாக இருந்தனர். ஆனால் இன்று இந்த ஆட்சியில் இந்த இரு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று 2021 தேர்தலின்போது உறுதி அளிக்கப்பட்டது. அரசு காலிப்பணியிடங்கள் 3 லட்சம், அரசு சார்ந்த அமைப்புகளில் 2 லட்சம் — மொத்தம் 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலத்தில் ஓய்வு பெற்றோர் எண்ணிக்கை சுமார் 1 லட்சம். ஆனால் புதிய நியமனங்கள் சுமார் 94 ஆயிரம் மட்டுமே. அதாவது ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கைக்கும் இணையாக கூட புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசு தொடர வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
அண்ணா திமுக ஆட்சியில், நகரம் முதல் கிராமம் வரை ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறும் சூழல் உருவாக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. நிர்வாக வசதிக்காக 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன, 7 சட்டக் கல்லூரிகள், 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
26 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 4 வேளாண்மை கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையங்கள், ஐடி கல்லூரிகள்இவ்வாறு பல கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
இதன் விளைவாக, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது இந்த ஆட்சியில் மக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு திட்டமாவது கொண்டு வரப்பட்டதா? ஒரு புதிய மருத்துவக் கல்லூரியாவது தொடங்கப்பட்டதா?. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் 11 இலிருந்து 16 ஆக உயர்ந்தன. நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் பல சாதனைகள் செய்யப்பட்டன.
இதுவே அண்ணா திமுக ஆட்சியின் திறமை. அதனால், திமுக மற்றும் அண்ணா திமுக ஆட்சிகளை ஒப்பிட்டு பார்த்தால் எது சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள்; நாட்டின் நிலைமை புரிந்தவர்கள்.தமிழகத்தில் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டுமெனில், அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!