காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: “ஆபரேஷன் சிந்தூர்” - அமெரிக்கர்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் கொடுத்த அட்வைஸ்!

மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டையும் கருத்துகளையும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால், விருதுநகர் மாவட்ட அதிமுகவை சேர்ந்த 1000 இளைஞர்களும் எனது தலைமையில் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி சண்டையிட தயாராக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘ஆபரேஷன் சிந்தூர்’: நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் கூறியது என்ன?