தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பான அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த சத்யபாமா மற்றும் பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவம் பெரும் பேச்சாகியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பின்னால் திட்டமிட்ட செயல்பாடு இருப்பதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அதிமுக எம்பி இன்ப துரை இதை “100 சதவீத குதிரை பேரம்” என விமர்சித்துள்ளார். சம்பவத்தின் தொடர்ச்சி மிகவும் வேகமாக நடைபெற்றது. மூவரும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களிடம் ராஜினாமா கடிதங்களை அளித்த சிறிது நேரத்திலேயே, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை அவசர அவசரமாகச் சந்தித்தனர்.

அங்கு அவர்களை தவெகவில் உடனடியாக இணைத்து, உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்த “எக்ஸ்பிரஸ் வேக” நடவடிக்கை அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா ஏற்கப்படும் முன்பே கட்சி மாற்றம் நடைபெற்றது என்பது, எதிர்காலத்தில் சட்டரீதியான சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெடிக்கும் பிரச்சனை..! பதவி விலகிய எம்எல்ஏக்கள்.! ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!
இந்தச் சம்பவத்தை அதிமுகவின் ராஜ்ய சபா உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்ப துரை கடுமையாக விமர்சித்தார். “இது 100 சதவீத குதிரை பேரம்” என அவர் தெரிவித்தார். அதிமுகவுக்குள் உள்ள உட்கட்சி பிரச்சினைகளைப் பயன்படுத்தி, தவெக தரப்பு இந்த மூவரையும் இழுத்துச் சென்றதாக அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை, தவெக அரசுக்கு பலத்தை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாக அவர் பார்க்கிறார். இதுபோன்ற குதிரை பேரங்கள் தமிழக அரசியலை மேலும் சீரழிக்கும் என்ற எச்சரிக்கையும் அவரிடமிருந்து வந்துள்ளது.
இதையும் படிங்க: கரையும் அதிமுக கோட்டை... விஜய் பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்..! பொன்னாடை போர்த்தி வரவேற்ற ஆதவ் அர்ஜுனா..!