தாம்பரம் மாநகராட்சியின் அனைத்து விவகாரங்களிலும் தலையிடும் பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதியின் நடவடிக்கையால் எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்தப்படி தாம்பரம் முதல் பெண் மேயர் இருப்பதாக திமுக வட்டாராத்தில் பெரிதாக பேசப்படுகிறது.
கடந்த ஆண்டு வீட்டு வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய தம்பதி பின்னர் கைதும் செய்யப்பட்டனர். இவர்களை காப்பாற்ற பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி எவ்வளவோ முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. ஏன் அவர் அவ்வளவு முயன்றார் என்றால் குற்றமிழைத்தது அவரது மகனும் மருமகளும். இந்த விவகாரத்தில் சிக்கிய இ.கருணாநிதி பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இவரது அண்ணன் ஜோசப் அண்ணாதுரை பல்லாவரம் மண்டல தலைவர், போதாதா மாநகராட்சியே தனக்குத்தான் சொந்தம் என்று செயல்பட? என்று கேள்வி எழுப்புகின்றனர் உடன் பிறப்புகள்.

அப்படி என்னதான் செய்கிறார் இ.க. என்று கேட்டால் ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல என்று பாட்டாக படிக்கிறார்கள். தாம்பரம் மாநகராட்சி அமைக்கப்பட்டவுடன் அதன் முதல் மேயர் க.வசந்தகுமாரி தேர்வு செய்யப்பட்டார். தாம்பரம் மாநகராட்சிக்குள் தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகள் வருகின்றது. தாம்பரம் எம்.எல்.ஏ தா.மோ.அன்பரசன் அமைச்சர், பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி பழைய ஆள். இவர்கள் இருவருக்கும் இடையே கோஷ்டி மோதல் உள்ளது.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிஸி.. ஜனவரி 1-ல் 'சின்னவரை' சந்திக்க முடியாமல் அதிகாரிகள் ஏமாற்றம்
இந்த கோஷ்டி மோதலில் எந்தப்பக்கம் நிற்பது என தெரியாமல் தவித்து நிற்கிறார். மேயர் பெண் என்பதால் இருவரும் மதிப்பதே இல்லை என்கின்றனர் கட்சிக்காரர்கள்.
தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 70 வார்டுகளுடன் தாம்பரம் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.
தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகள் அனைத்தும் தாம்பரம் மாநகராட்சியின் கீழ் உள்ளது.தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக க.வசந்தகுமாரி திமுக தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் மேயராக பொறுப்பேற்ற நாளிலிருந்து அவருக்கு உரிய உரிமையும், உரிய மரியாதையையும், கௌரவத்தையும் இரண்டு தொகுதிகளிலும் உள்ள எம்எல்ஏக்கள் வழங்கவில்லை என்ற புகார் நீண்ட நாட்களாக உள்ளது.ஏற்கனவே தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அமைச்சர் அணி, எம்எல்ஏ அணி என இரண்டு கோஷ்டிகளாக உள்ளது.தாம்பரம் மேயரை பொருத்தவரை இரண்டு பக்கமும் தலையாட்டிக் கொண்டு செல்லும் நிலையில் உள்ளார்.

இந்நிலையில் பல்லாவரம் தொகுதியில் நடைபெறும் மாநகராட்சி பணிகள் அனைத்திற்கும் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே அனைத்து பணிகளையும் அவர்களாக முன்னெடுத்து செய்து கொள்கிறார்கள்.
மேயரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை அப்படியே மேயர் சென்றால் அவரை அவர்கள் மதிப்பதும் இல்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்காரர்களால், கவுன்சிலர்களால் பரவலாக வைக்கப்படுகிறது.
பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் அண்ணன் ஜோசப் அண்ணாதுரை பல்லாவரம் மண்டல தலைவராக உள்ளார்.
ஜோசப் அண்ணாதுரையின் மேற்பார்வையிலேயே அனைத்து பணிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
ஜோசப் அண்ணாதுரைக்கு கொடுக்கும் மரியாதையை கூட மேயருக்கு மாநகராட்சி அதிகாரிகள் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாவரம் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதவாளர்கள் அமைச்சருடனே இருந்து அவர்கள் தான் அனைத்தையும் முன்னின்று நடத்துவது போல் காட்டிக்கொண்டனர்.
இதனால் மேயர் முதல் மாமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.தொடர்ந்து இதுபோல மேயர், திமுக மற்றும் கூட்டணி மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் பல்லாவரம் எம்எல்ஏ ஆதரவாளர்கள் புறக்கணித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: துரைமுருகன் வீட்டில் ரெய்டு ..பழைய வழக்கு சம்பந்த வழக்கா ..கொளுத்திப்போட்ட அமைச்சர் காந்தி ..!