சென்னையில் ஆளும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டதும், திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களும் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தை முற்றிலுமாக கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், மாநிலத்தில் உளவுத்துறை உண்மையில் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மிகக் காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தலைநகர் சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் மாவட்டங்களிலும் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொடூரக் குற்றச் சம்பவங்கள் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் வசம் உள்ள காவல் துறை மற்றும் சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தின் படுதோல்வியை சுட்டிக்காட்டி அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது கண்டன அறிக்கையில் அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கியுள்ள அவர், "தலைநகர் சென்னையில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பிரமுகரே நடுரோட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சமூக விரோதிகளையும் தீவிரக் குற்றவாளிகளையும் முன்கூட்டியே கண்காணித்துத் தடுக்க வேண்டிய உளவுத்துறை தமிழ்நாட்டில் இயங்குகிறதா என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் வலுத்துள்ளது. அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் அரசு இனியாவது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று சாடியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

மேலும் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்புச் சீர்கேடு குறித்துப் பேசிய அவர், "திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற 3 ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. கொள்ளைக் கும்பல் எந்த நேரத்திலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துவிடக்கூடும் என்ற அச்சத்தினால் பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாமல் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் நடமாட்டத்தை உளவுத்துறையும் காவல்துறையும் தொடக்கத்திலேயே கண்காணிக்கத் தவறியதே அடுத்தடுத்து 3 இடங்களில் துணிகரமாகக் கொள்ளை நடக்க அடிப்படைக் காரணமாகும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு இனியும் விழித்துக்கொண்டு சமூக விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!