திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், செய்தியாளர்களை சந்தித்து சட்டப்பேரவை செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு மற்றும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இடைத்தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது குறித்து கேட்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு அரசியல் போக்கை அவர் சுட்டிக்காட்டினார். ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தங்களது தொகுதிக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என மக்கள் கருதும் நிலை இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தொகுதி வளர்ச்சிக்கு பயன் கிடைக்கும் என்ற எண்ணம் தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், தவெக கூட்டணியை விமர்சிக்கும் இடதுசாரிகள் குறித்தும், இடைத்தேர்தலில் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்தும் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்தார். பேரவைத் தலைவர் என்ற முறையில் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!
சட்டப்பேரவையில் கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த அளவிலேயே பதில் வழங்கப்படுவதாக கூறப்படும் விமர்சனத்திற்கும் அவர் விளக்கம் அளித்தார். கேள்விகளுக்கான பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி பெற்று, தேவையானபோது உறுப்பினர்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்குவது வழக்கமான நடைமுறை என கூறினார்.

இந்த முறை அதிகமான உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை பதிவு செய்யும் வகையில் புதிய அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அதிக நேரம் வழங்க முயற்சி செய்ததாக கூறினார். இதனால் சில கேள்விகளுக்கு அவையிலேயே உடனடி பதில் பெறுவதில் சிரமம் ஏற்பட்டாலும், பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மூலம் பதில்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக விளக்கினார்.
சபாநாயகர் ஒரு சார்பாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு குறித்தும் அவர் மறுப்பு தெரிவித்தார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் விதிகளுக்கு உட்பட்டே நடைபெறுவதாகவும், குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
துண்டுச்சீட்டு வந்ததால் எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அவர், “எந்த துண்டுக்கும், எந்த சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல; விதிக்கு மட்டும்தான் அடிபணிவேன். உறுப்பினர்களின் குரலுக்கு மட்டுமே செவிமடுப்பேன்” என தெரிவித்தார். அவை குறிப்புகளை பெறுவதற்காக வந்த சீட்டை மட்டுமே தான் பார்த்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
அதிமுக எம்எல்ஏ பதவி தொடர்பான மேல்முறையீட்டு விவகாரத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சட்டப்பேரவை கட்டுப்பட்டு செயல்படும் என்றும், சட்டமன்ற விதிகள் மற்றும் தனது அதிகார வரம்புக்கு உட்பட்டே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டசபையில் தவெக உறுப்பினர்களை விட திமுக, அதிமுகவுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தேன்! சபாநாயகர் பேச்சால் கலகல!