சென்னை: கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு திமுக எம்.பி. கனிமொழி அஞ்சலி செலுத்தியுள்ளார். இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் எங்கும் நடைபெறாத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில், திமுக எம்.பி. கனிமொழி ஞாயிற்றுக்கிழமை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வண்டலூர் பள்ளியில் மாணவிக்கு பாலியல் கொடுமை? ‘மூடி மறைக்க முயற்சி’ – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
அதில், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பு, தமிழக மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில் சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவருக்கும் தனது அஞ்சலியையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கரூர் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் விஜய்யும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நாள் தனது வாழ்விலும், கரூர் மக்களின் வாழ்விலும், தமிழக மக்களின் மனதிலும் ஆறாத காயமாகவும் தீராத வலியாகவும் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஓராண்டு கடந்த நிலையிலும் கரூர் சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் அரசியல் மற்றும் பொதுவெளியில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி, ஆதரவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களும் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: திமுகவுக்கு வட மாநிலங்களில் ‘நோ’? உதயநிதி பேச்சால் எடுபடாமல் போனது கனிமொழியின் முயற்சி?!