சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசாவின் பேச்சு அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக மூத்த தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள ஒரு திருக்குறள் பதிவு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய கருத்துகள் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே அரசியல் மோதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மிசா காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் தமிழகம் முழுவதும் கண்டன போராட்டங்களை நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது ஆ.ராசா பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, மாற்றுக் கட்சியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவர் பேசிய விதத்துக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் வந்தாச்சு..! பரபரக்கும் அரசியல் களம்..! ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அனல் பிரச்சாரம்..!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்கனவே அரசியல் ரீதியாக பரபரப்பில் இருந்த இந்த விவகாரம், கூட்டணி கட்சிகளுக்கிடையேயான விவாதமாகவும் மாறியுள்ளது.
இந்த சூழலில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் திருக்குறள் ஒன்றை மட்டும் பதிவிட்டுள்ளார்.

“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற குறளையே அவர் பதிவிட்டுள்ளார். அதற்கு தனியாக எந்த விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை.
ஒருவர் எதை காக்கத் தவறினாலும் தனது நாவை கட்டுப்படுத்திக் காக்க வேண்டும்; இல்லையெனில் தவறான சொற்களால் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதே இந்தக் குறளின் பொருள்.
ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நேரத்தில், கனிமொழி இதே கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை பதிவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேநேரத்தில், கனிமொழியின் பதிவை ஆ.ராசாவின் பேச்சுடன் நேரடியாக தொடர்புபடுத்தி அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் அந்தப் பதிவு பொதுவான கருத்தா அல்லது தற்போதைய சர்ச்சைக்கு மறைமுகமான பதிலா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!