பெங்களூரு: கர்நாடகா சட்டசபையின் இன்றைய (ஜனவரி 22, 2026) கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவர்னர் தாவர்சந்த் கெலாட், அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், வெறும் இரண்டு வரிகள் மட்டும் வாசித்துவிட்டு சபையிலிருந்து வெளியேறினார். இதனால் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்; சபையில் குழப்பம் நிலவியது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபை முதல் கூட்டத் தொடர் தொடங்கும்போது கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரையை மாநில அரசு தயாரித்து கொடுப்பது வழக்கம்; அதில் அரசின் திட்டங்கள், சாதனைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விவரிக்கப்படும். கவர்னர் அதை அப்படியே வாசிப்பது சம்பிரதாயமாக இருந்தாலும், உரையில் தவறு அல்லது சந்தேகம் இருந்தால் அதை மாற்றுமாறு அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு. ஆனால் அப்படியே வாசிக்க வேண்டும் என்ற கட்டாய விதி இல்லை.
இன்று கூட்டம் தொடங்கியதும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையைத் தொடங்கினார். ஆனால் வெறும் "என் அரசு மாநிலத்தின் பொருளாதார, சமூக மற்றும் உடல் வளர்ச்சியை இரட்டிப்பாக்க உறுதிபூண்டுள்ளது. ஜெய் ஹிந்த், ஜெய் கர்நாடகா" என்ற இரண்டு வரிகள் மட்டும் வாசித்துவிட்டு உரையை நிறுத்தி சபையிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் "அவமானம்" என்று கோஷமிட்டனர்; சிலர் கவர்னரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதையும் படிங்க: கேரளாவின் மலையாளம் கட்டாய சட்டத்திற்கு கர்நாடகாவின் கடும் எதிர்ப்பு.. பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்..!!
முதல்வர் சித்தராமையா இதை கடுமையாக கண்டித்தார். "கவர்னர் அரசு தயாரித்த உரையை படிக்காமல் தனது சொந்த உரையை படித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்பின் 176 மற்றும் 163-வது பிரிவுகளை மீறிய செயல். அரசியலமைப்புக்கு எதிரானது. மத்திய அரசின் பொம்மையாக செயல்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வது குறித்து பரிசீலிப்போம். கவர்னரின் போக்கை கண்டித்து போராட்டங்கள் நடத்துவோம்" என்று கூறினார்.

இந்த சம்பவம் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் அண்மையில் நடந்த கவர்னர்-அரசு மோதல்களை நினைவூட்டுகிறது. தமிழகத்தில் கவர்னர் ஆர்.என். ரவி தேசிய கீதம் விவகாரத்தில் உரையை புறக்கணித்தார்; கேரளாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையை முழுமையாக படிக்காமல் வெளியேறினார். கர்நாடகாவில் இது MGNREGA-வை மாற்றும் VB-G RAM G Act தொடர்பான உரை பகுதிகளில் கவர்னருக்கு ஆட்சேபனை இருந்ததால் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் கர்நாடகாவில் காங்கிரஸ்-பாஜக இடையேயான அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கவர்னர்-அரசு உறவு மோசமடைந்துள்ள நிலையில், சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும் பதற்றம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: த.மா.கா. தனிச் சின்னத்தில் போட்டி..! பியூஷ் கோயலுடன் ஆலோசித்த பிறகு ஜி.கே. வாசன் அறிவிப்பு..!