மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடிக்கும் மேல் மதிப்பிலான சொத்துவரி முறைகேடு வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருந்த நிலையில், வழக்கை ஆரம்பம் முதல் விசாரித்து வந்த உதவி கமிஷனர் வினோதினி திண்டுக்கல்லுக்கு டி.எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விசாரணை முடிவடைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் பெரும் தாமதம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
2024 செப்டம்பரில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தனியார் கட்டட உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விதிமீறலுடன் சொத்துவரி குறைத்து நிர்ணயிக்கப்பட்டது தொடர்பாக 2025 ஜூன் மாதத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதவி கமிஷனர் வினோதினி இந்த வழக்கை தொடக்கம் முதல் கையாண்டு வந்தார். கடந்த 7 மாதங்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 350-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை முடிந்துள்ளது. வழக்கு இறுதி கட்டத்தை எட்டியிருந்த நிலையில், 'உள்ளூர் அரசியல் அழுத்தம்' காரணமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக ஏற்கனவே சர்ச்சை எழுந்திருந்தது.
இதையும் படிங்க: ரூ. 4 லட்சம் கோடியை அமுக்கிய திமுக!! எந்தெந்த துறையில் எவ்வளவு பணம் ஊழல்! எடப்பாடி வெளியிட்ட பட்டியல்!

தற்போது வினோதினி இடமாற்றம் செய்யப்பட்டதால் வழக்கு மேலும் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது. போலீஸ் தரப்பில் ஒரு அதிகாரி கூறுகையில், “இது வழக்கமான இடமாற்றம் தான். வழக்கின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் தான். இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படாது. வழக்கை கண்காணிக்கும் டி.ஐ.ஜி. உரிய உத்தரவுகளை பிறப்பிப்பார்” என்றார்.
மறுபுறம், தி.மு.க. கவுன்சிலர்கள் இந்த வழக்கு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “இந்த முறைகேடு வழக்கு முடிவுக்கு வந்தால், மாநகராட்சிக்கு புதிய மேயர், மண்டலத் தலைவர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிவரும். இந்த விவகாரத்தால் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் வார்டுகளுக்குள் செல்ல முடியாமல் உள்ளனர். மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தவறு செய்யாத கவுன்சிலர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்” என்றனர்.
இந்த வழக்கு மதுரை மாநகராட்சியின் நிர்வாகத்தையும், ஆளுங்கட்சியினரையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில், விசாரணை அதிகாரியின் இடமாற்றம் புதிய சர்ச்சையை தொடர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ஓயாத திருப்பரங்குன்றம் சர்ச்சை! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! ஹைகோர்ட் அதிரடி தடை!