தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடையே பகிரங்கமான வார்த்தைப் போர் வெடுத்துள்ளது. பாமக மற்றும் விசிக இடையிலான மோதல் பேச்சுவார்த்தை நடத்தினால் தீரும் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்த கருத்தே இந்த மோதலுக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு வன்னி அரசு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "பாமகவினரோ அல்லது வேறு ஏதேனும் சாதியவாதிகளோ செல்வப்பெருந்தகைக்கு இது போன்ற அஜெண்டாவைக் கொடுத்துள்ளார்களா என்று தெரியவில்லை. சாதியவாதப் பாமகவோடும், மதவாதப் பாஜகவோடும் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பது விசிக தனது கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் எடுத்த உறுதியான முடிவாகும். நிலைமை இப்படி இருக்க, இரு தரப்பும் பேசினால் தீரும் என்று செல்வப்பெருந்தகை கூறுவது வேடிக்கையாக உள்ளது. எமது தலைவர் திருமாவளவனுக்கு ஆலோசனை கூறும் அளவிற்குச் செல்வப்பெருந்தகை இன்னும் வளரவில்லை என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று சாடியுள்ளார்.
மேலும், செல்வப்பெருந்தகையின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்த வன்னி அரசு, "அடுத்த கட்சியின் உள்விவகாரங்களைப் பேசுவதை விட்டுவிட்டு, தனது சொந்தக் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல்களையும் முரண்பாடுகளையும் செல்வப்பெருந்தகை தீர்த்து வைத்தால் அது காங்கிரசுக்கு நல்லது. அவர் பேசியதில் எவ்வித நல்ல எண்ணமும் இருப்பதாகத் தெரியவில்லை. இது வெறும் விளம்பர அரசியலுக்காகவும், தேர்தல் ஆதாயத்திற்காகவும் செய்யப்பட்ட ஒரு 'ஸ்டண்ட்' மட்டுமே. பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பாமகவின் வருகையைத் திமுக ஒருபோதும் ஏற்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் திமுக தலைமைக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு நிதி ஒதுக்கல.. பாராளுமன்றத்தில் கேள்வி கேட்போம்..!! திருமா பரபரப்பு பேட்டி..!!
இதையும் படிங்க: “கமல்ஹாசன் உரைக்கு கோனார் உரை தேடும் பாஜக!” புதுச்சேரியில் திருமாவளவன் விமர்சனம்!