ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவில் பங்கேற்க சென்றுள்ள அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், அதற்கு முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமாரிடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், கோவிலில் மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கோவிலில் அடுத்தடுத்து முக்கியப் பிரமுகர்கள் வருகை தர இருந்ததால், முந்தைய நாளிலிருந்தே ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கும் வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பராமரிப்புப் பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் மின்சார இணைப்புக்கு மாறும்போது (Switch Over) சுமார் 7 முதல் 8 நிமிடங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில்தான் மின்சாரத் தடை ஏற்பட்டதாக விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!
மேலும், காலையிலிருந்தே ஜெனரேட்டர் மூலமாகத்தான் மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததாகவும், பராமரிப்புப் பணிகள் மற்றும் மின்சார இணைப்பு மாற்றம் குறித்த தகவல்கள் முறையாகத் தெரிவிக்கப்படாததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முக்கியப் பிரமுகர்கள் செல்லும் இடங்களில் வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வருகை தரும்போது வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளனவே என்ற கேள்விக்கு, குறிப்பிட்ட எந்தத் துறையையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட துறைகளில் உள்நாட்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், பல்வேறு இடங்களில் பணியிட மாற்றங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். குறைபாடுகள் தொடர்ந்து சரிசெய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மின்சாரம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், தற்போது மின்சாரம் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், டெண்டர் மட்டுமே கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற டெண்டரில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.8 முதல் ரூ.41.35 வரை விலை குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், குறைந்த மற்றும் நியாயமான விலையில் மின்சாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து டெண்டர் கோரப்படும். இதற்காக நவம்பர் 5-ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் ஒரு டெண்டர் கோரப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சில நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு அதிக விலையை நிர்ணயிப்பதாகவும், அத்தகைய விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய அரசு தயாராக இல்லை என்றும் கூறினார்.
தமிழகத்தில் செயற்கையாக மின்தடை ஏற்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்தியா முழுவதும் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பல மாநிலங்களில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுவதால், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.47 வரை கொடுத்து வாங்கியுள்ளன. இதுபோன்ற மின்சாரத் தட்டுப்பாடு தேசிய அளவில் நிலவும் பிரச்சினையாகும். இதுகுறித்து மத்திய அரசிடம் தமிழகத்தின் கண்டனத்தையும், கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளோம். மின்சாரத் தேவையை முன்கூட்டியே கணிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மின்சார வாரியம், காவல்துறை மற்றும் சிறைத்துறை எனத் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மூன்று துறைகளிலும் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், ஒவ்வொரு துறையிலும் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை அடையாளம் கண்டு, அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
துறைகள் தொடர்பாகத் தான் தெரிவிக்கும் சில கருத்துகள் காரணமாகவே சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம் என்றும், அனைத்துத் துறைகளிலும் அன்றாடம் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!