முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 21ம் தேதி காலை நடைபயிற்சியின் போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனைகளுடன், 3 நாட்கள் தொடர்ந்து ஓய்வில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை சபரீசன் ஆகியோர் மருத்துவமனையில் உடன் உள்ளனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் சென்று முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சேஃப்டி ஃபர்ஸ்ட்! கூடுதல் தோழி விடுதிகள்.. டெண்டர் கோரிய தமிழக அரசு..!
இதனிடையே 2வது நாளான நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை, அவரது மூத்த சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற மு.க.அழகிரி, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி இன்னம் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் வருகை! பாதுகாப்பு வளையத்தில் தூத்துக்குடி மாநகரம்!