சென்னை: தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த அவரை, சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, போரூர் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் வழியில் சாலைப் பயணம் மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். காரில் நின்றபடி பிரதமர் மக்களைப் பார்த்துக் கையசைத்தார். அவரது வாகனத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யும் காரில் சென்றார்.
இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும். சுமார் ரூ.4,900 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் 11 ரயில் நிலையங்கள் தொடக்கத்தில் பயணிகள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: கற்பூர நாயகியே!! தமிழ் பக்திப் பாடலுடன் பிரதமர் மோடியின் நவராத்திரி வாழ்த்து! சென்னை வரும்முன்னே சிக்சர்!!

மெட்ரோ பயணத்தின்போது மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரின் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் இந்தத் திட்டம், பூந்தமல்லி, போரூர், வடபழனி பகுதிகளுக்கு இடையிலான பயணத்துக்கு உதவும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சென்னை ஐஐடி வளாகத்துக்குச் செல்லும் பிரதமர், அங்குள்ள ஜல கண்டேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தி, மூளை ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிடுகிறார். பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்தில் சுமார் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பது, அடிக்கல் நாட்டுவது மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிப்பது பிரதமரின் பயணத்தின் முக்கிய அம்சமாகும். இதில் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும், ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களும் இடம்பெறுகின்றன.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், மெட்ரோ வழித்தடம், ஐஐடி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகளை ஒட்டி சில சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களும் அமல்படுத்தப்படலாம்.
இதையும் படிங்க: ஏர்போர்ட்டுக்கே நேரில் சென்ற முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை வரவேற்கத் தயார்… பாதுகாப்பு வளையத்தில் சென்னை!