விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், இன்று காலை விளாத்திகுளம் போலீசார், மார்க்கண்டேயனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, காவல்துறை வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல விடாமல், திமுக நிர்வாகிகளும், அவரது உறவினர்களும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் பொறுப்பா நடக்கணும்..! காவிரி நீர் பிரச்சனை..! கனிமொழி கண்டனம்..!!
இதையடுத்து, போலீசார் பாதுகாப்புடன் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று, நேரடியாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தற்போது, அங்கு டி.எஸ்.பி. தலைமையில் மார்க்கண்டேயனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோதும், அவரிடம் இதே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்தான் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, திமுகவினர் அதிக அளவில் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன், போராட்டங்களும் நடைபெற்றன. பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதேபோன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில், தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!