தமிழக சட்டசபைத் தேர்தலில் முஸ்லிம் ஓட்டு வங்கியில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தி.மு.க.வுக்கு உறுதியான ஆதரவாக இருந்த முஸ்லிம் வாக்குகள் இப்போது சிதறத் தொடங்கியுள்ளன.
தி.மு.க. சிறுபான்மை ஓட்டுகளை தக்க வைக்க பா.ஜ.வை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறது என்ற கருத்து நிலவுகிறது. தேசிய அளவில் காங்கிரஸும் இடதுசாரிகளும் சிறுபான்மை ஓட்டு அரசியல் செய்வது போல, மாநில அளவில் தி.மு.க. இதைச் செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. நடிகர் விஜய் கூட தன் கட்சியின் இப்தார் நிகழ்ச்சியில் குல்லா அணிந்து “மதச்சார்பற்ற சமூக நீதியை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று பேசியிருந்தார்.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் தி.மு.க. தன் கூட்டணியில் இணைத்துக்கொண்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் ஓட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கே செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருந்தது. ஆனால் இப்போது முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரியத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: களையெடுக்கும் ராமதாஸ்! புதுச்சேரி நிர்வாகிகள் கலக்கம்! வேறு கட்சிகளுக்கு தாவ திட்டம்!!

தி.மு.க. முஸ்லிம்களை பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டாலும், கடந்த தேர்தலில் கொடுத்த சிறுபான்மை வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மணிமண்டபம், அரசு விழாக்கள், ஹஜ் மானியம், இப்தார் விருந்து, நோன்பு கஞ்சிக்கு அரிசி போன்ற சின்னச் சின்ன சலுகைகளுடன் நின்றுவிட்டது. முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றம், தரமான கல்வி, வேலைவாய்ப்பு, சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
இளம் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது. ஜமாத் கட்டமைப்பை உடைத்து அவர்கள் தங்கள் விருப்பப்படி ஓட்டு போடத் தொடங்கியுள்ளனர். சிலர் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெகவில் தீவிரமாக இணைந்து செயல்படுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 10 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சீமான் இஸ்லாமிய பிரச்னைகளை தொடர்ந்து பேசி வருகிறார். விஜயும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இதனால் முஸ்லிம் ஓட்டுகள் தி.மு.க. கூட்டணிக்கு மட்டும் சிதறாமல் வரும் என்பது பழைய கணக்காகி வருகிறது.
முஸ்லிம் இளைஞர்கள் “ஒரு-இரு சீட்களுக்கு மட்டும் தலைவர்கள் எம்.எல்.ஏ. ஆகிவிடுகின்றனர். பெண்களுக்கு வாய்ப்பே இல்லை” என்ற விரக்தியில் புதிய கட்சிகளை நோக்கி நகர்கின்றனர். இந்த மாற்றம் முஸ்லிம் பெரியவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் முஸ்லிம் ஓட்டு வங்கியில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, தமிழக அரசியல் களத்தை மாற்றியமைக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் ஏமாத்திட்டா என்ன? நம்ம அஜித் இருக்காரே!! அதிமுக புதிய ப்ளான்! எடப்பாடியாருக்கு ஏக குஷி!