நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரும், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளருமான காளியம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை விட்டு விலகினார். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தப்படியாக முக்கியமான மேடை பேச்சாளராகவும், பிரபலமான முகமாகவும் காளியம்மாள் வலம் வந்தார். ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காளியம்மாளுக்கு இடையே பனிப்போர் நடந்து வந்தது. மேடையிலேயே காளியம்மாளை விமர்சிப்பது, அவர் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது என நாளடைவில் அவர்களின் பனிப்போர் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிய நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கு போட்டார்.
இதனையடுத்து காளியம்மாள் திமுகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கும், காளியம்மாளுக்கும் இடையே உரசல் உச்சக்கட்டத்தில் இருந்த போது, தமிழ்நாடு அரசு சார்பில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காளியம்மாள் வரவேற்பு உரையாற்றவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகின. மேலும் திமுகவில் இணைவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தனது தரப்பில் இருந்து காளியம்மாள் சில கோரிக்கைகளை திமுகவிற்கு வைத்துள்ளதாகவும் கூட கூறப்பட்டது.
அதன்பின்னர் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், தவெகவில் இணைவதற்காக அக்கட்சியின் தலைவர் விஜயை காளியம்மாள் நேரில் சந்தித்ததாகவும் கூட செய்திகள் அடுத்தடுத்து வெளியாகின. ஆனால் நாம் தமிழர் கட்சியை தூக்கியடித்த கையோடு சமூக செயற்பாட்டாளராக செயல்பட தொடங்கினார்.
இதையும் படிங்க: டெல்லி TO மதுரை... திமுக அரசுக்கு சம்மட்டி அடி! பந்தாடிய அண்ணாமலை...!
இந்த நிலையில்தான் இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வைத்து ஒரு முக்கிய அரசியல் பிரமுகரைச் சந்தித்ததாக தகவல் வெளியானது. அவரோடு ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூடிய விரைவில் அந்த நபர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த முக்கிய நபர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தான் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து இருதரப்பும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம், பாஜகவில் காளியம்மாள் இணையப்போவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையா என கேள்வி எழுப்பப்பட்டது, "தனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் நிறைய பேர் என்னிடம் இதுகுறித்து கேட்டார்கள். ஆனால் எனக்கு எதுவும் தெரியாது" என்றும் தெரிவித்தார். முக்கியமான பிரமுகர் ஒருவர் இணைய உள்ளதாக கேட்டதற்கு அப்படி எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குப்பை வண்டியில் கர்ப்பிணிகளுக்கு மருந்து... இவ்ளோ அலட்சியமா? விளாசிய அண்ணாமலை