விக்கிரமசிங்கபுரம் அருகே அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும்,
மெழுகுவர்த்தி ஏந்தியும் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு படிக்க முடியாத நிலையும், சிறு, குறு தொழிலாளர்களுக்கு தொழில் பாதிப்பும் ஏற்படுகிறது.
மின்வாரியத்தின் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பல்வேறு தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில் சில இடங்களில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 1ஆவது வார்டு பகுதியான கோட்டைவிளைபட்டி, வடமலைசமுத்திரம், முதலியார்பட்டி பகுதிகளிலும் இரவு நேரத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் இரவு நேரங்களில் கை குழந்தைகள் உடன் சிரமப்படுவதாக கூறி மின்வரியத்தைக் கண்டித்து அப்பகுதி கவுன்சிலர் கிராஸ் இமாக்குலேட் தலைமையில் முதலியார்பட்டி பகுதியில் கைகளில் மெழுகுவர்த்தி மற்றும் தீபந்தங்களை ஏந்தியபடி பொதுமக்கள் ஊர்வலமாக சென்று தெருவில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள், மரங்களில் தீப்பந்தங்களை கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை பற்றி தெரியாதா.? சந்தி சிரித்த சட்டம் ஒழுங்கு..! சீரமைக்கும் முதல்வர்... தவெக பெருமிதம்..!!
நீண்ட நேரமாகியும் மின்வாரிய துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் பாபநாசத்தில் இருந்து ஆம்பூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த அதிமுக சார்பாக வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்து தவெகவில் தாவியவரும், தமிழக வெற்றி கழக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளருமான இசக்கி சுப்பையா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்தவர்கள் இசக்கி சுப்பையாவை ஓடு ஓடு எனவும் திரும்பி போ திரும்பி போ எனக்கூறி எச்சரித்தனர். மேலும் நாங்கள் அதிகாரிகளிடம் தான் பேச்சுவார்த்தைக்கு கேட்டோம் உங்களை அழைக்கவில்லை எனக் கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி இனி வரும் காலங்களில் முன் அறிவிப்பின்படி மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்..
இதுகுறித்து கவுன்சிலர் கிராஸ் இமாக்குலேட் கூறுகையில், அதிகாரிகள் தற்போது மின்வெட்டு குறித்து முறையான அறிவிப்பு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலை நீடித்தால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும், மேலும் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமட்டும் அதிக அளவில் உள்ளதால் அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஏராளமானோர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்றார்..
இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்தில் இப்படியா?... உதயநிதி வெளியே வர,வர... தவெக தொண்டர்கள் செய்த காரியம்...!