மதுரை அரசு சட்டக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா, மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள், நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, முருகேசன், சரவணன் உள்ளிட்ட ஏராளமான நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பட்டம் பெறும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த அரங்கம் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டதாக உள்ளது. இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தனது உரையை முடித்துவிட்டு அமர்ந்த பின்னர், மூத்த நீதிபதி சந்திரா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மிக மோசமான மின்சாரத்துறை அமைச்சர்!! நிர்மல் குமாரை விமர்சித்த பி.டி.ஆர்.! பகீர் குற்றச்சாட்டு!
இதனால் உடனடியாக அரங்கில் சிரிப்பலை மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பணியாளர்கள் மூலம் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு தவெக அமைச்சர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். குறிப்பாக, மின்வெட்டு இல்லை என்றும் கூறி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலையில்கூட அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டியில், மின்வெட்டு பிரச்சினை சரிசெய்யப்பட்டு வருவதாகவும், விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்தப் பேட்டியை முடித்துவிட்டு அடுத்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் அரங்கம் முழுவதும் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்? மு.க.ஸ்டாலினை நோக்கி அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!