செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், அதை கற்றுக்கொள்ளவும் இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் தயக்கத்தை கைவிட்டு புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மதுரையில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற 'எல்லைகளைத் தாண்டிய தொழில்முனைவு' என்ற தலைப்பிலான தேசிய நிதித் தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான இளம் தொழில்முனைவோர், தொழில் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், தற்போதைய தலைமுறைக்கு தொழில் தொடங்க தேவையான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் முன்பை விட அதிகமாக உள்ளதாகக் கூறினார். "இன்று உங்களுக்கு பல வசதிகள் மிக எளிதாக கிடைக்கின்றன. அப்படியிருக்க, உங்களை தடுக்கிறது என்ன? தயக்கத்தை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

மேலும், இந்தியா தொழில் தொடங்க மிகவும் உகந்த நாடாக மாறி வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொழில்முனைவோர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி, ஊக்கத்திட்டங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு ஆதரவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்கால பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றும் என்பதால், இளைஞர்கள் AI தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு தங்கள் தொழில் மற்றும் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகளாவிய போட்டியில் இந்திய இளைஞர்கள் முன்னிலை வகிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் தொழில்முனைவு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தி, இளம் தலைமுறையினர் புதிய நிறுவனங்களை தொடங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்காற்ற வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன் சீட்டுக்கு வேட்டு! நிதியமைச்சர் ஆகிறார் சக்திகாந்த தாஸ்?! மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!?